பாடல் எண் :3885

செஞ்சொற் றமிழ்நா வலர்கோனுஞ் சேரர் பிரானுந் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறையாற்றி னிடையே யளித்த மணல்வழியிற்
றஞ்ச முடைய பரிசனமுந் தாமு மேறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து விழுந்தா ரெழுந்தார் பரவினார்.
138
(இ-ள்) செஞ்சொல் - பிரானும் - செம்மையுடைய சொல் வாய்ந்த தமிழ் நாவலர் பெருமானும் சேரர் நாட்டு அரசரும்; தம்பெருமான்...வழியில் - தமது இறைவனார் குறைவில்லாது நிறையப் பெருகிய ஆற்றின் இடையிலே அளித் தருளிய மணல் வழியில்; தஞ்சமுடைய......தலைச்சென்று; தமது சார்புடைய பரிசனங்களும் தாமும் ஏறிப்போய்; பஞ்சநதி....பரவினார் - திரு ஐயாற் றிறைவரைப் பணிந்து நிலமுற வீழ்ந்தார்கள்; எழுந்தார்கள்; துதித்தார்கள்.
(வி-ரை) செஞ்சொற்றமிழ் - செம்மை தரும் சொல்லையுடைய தமிழ்; ஆட் படும் தமிழ்.
எஞ்சலில்லா நிறை ஆறு - பரப்பினாலும் உயர்ச்சியினாலும் குறைவில்லாது. நிறைந்த ஆற்றுப் பெருக்கு.
தம்பெருமான் அளித்த வழி - இறைவனருளால் கண்டு கொடுத்த வழி; அளித்த என்ற குறிப்புமிது.
தஞ்சமுடைய - தம்முடைய சார்புடைய.
ஏறித் தலைச்சென்று - ஏறுதல் - நடந்து செல்லுதல்; தலைச் செல்லுதல் - ஒரு சொல்; கரை ஏறுதல்.
பஞ்சநதி - ஐயாறு - ஐந்தாறுகள் பற்றித் தலவிசேடம் பார்க்க.
விழுந்தார் - எழுந்தார் - பாடினார் - வினைமுற்றுக்கள் தனித்தனிச் செயல்கள் என்ற குறிப்புத் தருவன; விழுந்தார் எழுந்தார் - என்பனவற்றை வினைமுற்றெச்சங்களாகக் கொண்டு விழுந்து - எழுந்து - என்றலுமாம்
பரவினார் - முன் “போற்றிசைத்துÓ என்றது தமக்கு வழி கண்டருளிய அருள் பற்றிய துதி; இங்குப் பரவுதல் வழிபாடு பற்றியது.