பாடல் எண் :3886

அங்க ணரனார் கருணையினை யாற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளாற் றாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோ னின்றநீர் துரந்து தொடரப் பெருகியதால்.
139
(இ-ள்) அங்கண்.......இறைஞ்சி - அங்கண்மையுடைய இறைவரது திருவருளை நிறைவு பெறாத வகையில் அமைதிபடுத்திக்கொண்டு அதனுள் மூழ்கி வணங்கி; தங்கள்....மீண்டு - தங்கள் பெருமானாரது திருமுன்பு வணங்கி அங்கு நின்றும் மீண்டு போந்து; தடம்பொன்னி ..ஏற - பெரிய காவிரியாற்றின் முன்வந்தவாறே நடுவுட் போந்து கரையினை ஏற; துங்க....பெருகியது - பெரிய மலைபோல நின்ற நீர் விரைந்து தொடர்ந்து முன்போலப் பெருகி ஓடியது; ஆல் - அசை.
(வி-ரை) அங்கண் -அங்கண்மை; அடியார்க் கெளிமையாகிய அருணோக்கம்; அங்கண் - அவ்விடத்து என்றலுமாம்.
ஆற்றாது ஆற்றுதலாவது - நிறைவு பெறாதாயினும் நிறைவாக்கி அமைதல்.
முன் வந்தபடியே - முன் நதியினடுவுள் மணல்வழியே போந்தவாறே வட கரையினின்றும் தென்கரைக்குப் போந்து; நடுவு - ஆற்றினூடு கீறி,
துங்கவரை போல்நின்ற - துங்கம் - உயர்வு; முன் பளிக்கு வெற்பு - (3883) என்றார்; இங்கு நாயன்மார்கள் சென்று வழிபட்டு வரும்வரை மேன்மேலும் வரும்நீர் சேர்ந்து தேக்கம் பெற்றமையால் துங்கவரை என்றார்.
துரந்து - வேகமாக; சிதைபெற்ற நீர் அச்சிறை நீங்கியபோது வேகமா யோடும் இயைபு குறித்தது.
தொடர - முன் தொடர்ச்சியற்று இடைவழி கண்டு நின்றநிலை நீங்கித் தொடர்ச்சி பெற்று.
பெருகியது- கூடிநின்ற நீரும் கூடிப் பெருகியது என்பது.