ஆய செயலி னதிசயத்தைக் கண்டக் கரையி லையாறு மேய பெருமா னருள்போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த் தூய மதிவாழ் சடையார்தம் பதிகள் பிறவுந் தொழுதேத்திச் சேய கொங்கர் நாடணைந்தார் திருவா ரூரர் சேரருடன் . | 140 | (இ-ள்) ஆய....கண்டு - முன்கூறிய அவ்வாறாகிய அருட்செயலின் அதிசயத்தினைக்கண்டு; அக்கரையில்......தாழ்ந்து - அக்கரையினின்று திருவையாற்றிற் பொருந்திய பெருமானது திருவருளினைத் துதித்து நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்து; மேல் பாற்போய் - மேற்குத் திசையிலே சென்று; தூய....தொழுதேத்தி - தூய்மை பெற்ற பிறைவாழ்கின்ற சடையினையுடைய இறைவரது பிற பதிகள் பலவற்றையும் தொழுது துதித்துச் சென்று; சேய.....சேரருடன் - செம்மையுடைய கொங்கர்களது நாட்டினை நம்பியாரூரர் சேரனாருடன் அணைந்தனர். (வி-ரை) ஆய செயலின் அதிசயம் - முற்பாட்டிற் கூறியபடி பெருமலை போல் அதுவரை தடைபட்டு நின்ற நீர் இவர்கள் கடந்தேறியவுடன் வேகமாகத் தொடர்ந்து பெருகிய அதிசயம். அக்கரை - தென்கரை; அக்கரையில் நின்று போற்றித் தாழ்ந்து என்க. மேல்பாற் போய் - மேற்றிசை நோக்கிக் காவிரித் தென்கரை வழியே சென்று. பதிகள் பிற - இவை காவிரித் தென்கரையில் மேற்கு நோக்கிச் செல்லும் பழஞ் சாலைவழியில் உள்ளவை; திருஎறும்பியூர் திருச்சிராப்பள்ளி, திருமூக்கீச் மரம், திருக்கடம்பந்துறை முதலாயின என்பது கருதப்படும். சேய - கொங்கர் நாடு - சேய - செம்மை பெற்ற; செம்மையாவது முன்னர்ச் சேரர் பெருமானாரைச் செல்வழியிற் குறைவறுத்து உபசரித்தமை போலப் பெரியோரை வழிபட்டொழுகும் மேன்மை. சேய - சேய்மையில் உள்ள என்றலுமாம்; கொங்கர் - ஒருவகைப் பழய அரச மரபு. கொங்கராண்டமையாற் கொங்குநாடு எனப்படும்; சோழராண்டது சோழநாடு என்பதுபோல. கொங்கு நாடு - என்பதும் பாடம். |
|
|