கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட் டெல்லையுற “நங்கள் பெருமான் றோழனார் நம்பி தம்பி ரான்றோழர் அங்க ணுடனே வணையவெழுந் தருளா நின்றா” ரெனும்விருப்பால எங்கு மந்நாட் டுள்ளவர்க ளெல்லா மெதிர்கொண் டின்புறுவார்; | 141 | (இ-ள்) கொங்கு...உற - கொங்கு நாட்டினைத் தாண்டிச் சென்று விளங்கும் மலைநாட்டின் எல்லையினைச் சேர; நங்கள்....விருப்பால் - நங்கள் சேரர் பெருமானாரது தோழனாராகிய நம்பிகளாகிய தம்பிரான் றோழனார் அவ்விடத்து ஒரு சேர அணைவதற்கு எழுந்தருளி வருகின்றார் என்னும் விருப்பத்தினாலே; எங்கும்...இன்புறுவார் - அந்நாட்டில் எங்கெங்கும் உள்ளவர்கள் எல்லாரும் அவர்களை வர வேற்று எதிர்கொண்டு இன்பமுறுவார்களாகி; (வி-ரை) கொங்கு நாடு கடந்து போய் - இவர்கள் சென்ற வழிகரூர், கொடுமுடி, அவிநாசி வழியாக மலையாளத்துக்குச் செல்லும் பெருவழி என்பது கருதப்படும். நங்கள்....எனும் - இது மலைநாட்டு மக்கள் எண்ணியது; நங்கள் பெருமான் - தோழர் - நமது அரசராகிய சேரமானாரது தோழர்; “சேரமான் றோழர்Ó என்ற நாமத்தைப் பற்றி உரிமைப்படக் கூறியது; (3813) தம்பிரான்றோழர் என்னும் இறைவரைப் பற்றிய உரிமையினும் இதனை மேம்படக்கொண்டனர் என்பார் இதனை முன்வைத்தார். உடனே - ஒருசேர எங்கும்.....எல்லாம் - அந்நாட்டில் எங்கெங்கும் உள்ள எல்லாவகை மக்களும். இன்புறுவார் - முற்றெச்சம்; இன்புறுவாராகி , எங்கும் எங்கும் அணி செய்ய என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|