பாடல் எண் :3889

பதிக ளெங்குந் தோரணங்கள்; பாங்க ரெங்கும் பூவனங்கள்;
வதிக ளெங்குங் குளிர்பந்தர்; மனைக ளெங்கு மகிற் புகைக்கார்;
நதிக ளெங்கு மலர்ப்பிறங்கல்; ஞாங்க ரெங்கு மோங்குவன
நிதிக ளெங்கு முழவினொலி; நிலங்க ளெங்கும் பொலஞ்சுடர்ப்பூ;
142
(இ-ள்) பதிகள்.....பூவனங்கள் - பதிகளில் எங்கும் தோரணங்களும் பக்கங்களில் எங்கும் பூவனங்களாக ஆக்கிய அணிகளும்; வதிகள்......கார் - வழிகளில் எங்கும் குளிர்ச்சி செய்யும் பந்தர்களும், வீடுகளில் எங்கும் மேகம் போன்றெழும் அகிற்புகையும்; நதிகள்...மலர்ப்பிறங்கல் - நதிகளில் எங்கும் வரும் மலர்க்குவியல்கள்; ஞாங்கர்.....நதிகள் - அந்நதிகளின் பக்க இடங்களில் எங்கும் அவற்றால் ஒதுக்கப்படும் மணி பொன் முதலியனவாய் ஓங்குவனவாகிய நிதியங்களும்; எங்கும் முழவினொலி - எங்கும் முழவுகளின் ஒலியும்; நிலங்கள்...பொலஞ் சுடர்ப்பூ - நில மெங்கும் ஒளியுடைய பொற்பூ மழையும்; (ஆக இவ்வாறு அணிசெய்ய),
(வி-ரை) எங்கும் எங்கும் தோரணங்கள் முதலியனவாக இருக்க அணிசெய்ய என்பதாம்; முதலியனவாக இருக்க அணிசெய்ய என்பது இசையெச்சம்.
இப்பாட்டினால் அம் மலைநாட்டவர் எதிர்கொண் டின்புற்ற செயல்கள் கூறப்பட்டன.
பதிகள் - வழியில் உள்ள நகரங்கள்; பாங்கர் - நகரப் பக்கங்கள்; பூவனங்கள் - பூஞ்சோலைகளின் வகுப்புக்கள்.
வதிகள் - வழிகள்; கார் போன்ற அகிற்புகை என்க; கார் - கார் போன்ற; புகையாகிய கார் என்றலுமாம்.
மலர்ப்பிறங்கல்- நதிகள் வாரி அலைத்து வரும் மலர்க்குவியல்கள்; ஞாங்கர் - அந்நதிப் பக்க இடங்கள்; நிதிகள் - நதிகள் வாரிவந்து கரையில் ஒதுக்கும் பொன் மணி சங்கு முதலியவை.
நிலங்கள்....பூ - பொற்பூமாரி பெய்து வரவேற்றனர். அப்பூக்கள் அங்கு நிலம் எங்கும் கிடந்தன என்பது. இவ்வாறு திருவாரூர்த் தியாகேசர் எழுச்சியில் இன்றும் நிகழக் காணலாம்.
(பாங்கரெங்கும்) பலவளங்கள் - என்பதும் பாடம்.