பாடல் எண் :3890

திசைக டோறும் வரும்பெருமை யமைச்சர் சேனைப் பெருவெள்ளங்
குசைகொள் வாசி நிரைவெள்ளங் கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ள மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத்தமர்ந்து கொடுங்கோ ளூரணைந்தார்.
143
(இ-ள்) திசைகள்......பெருமை - இவ்வாறு எல்லாத் திசைகளிலும் வரும் பெருமைகளையும்; அமைச்சர்......கண்டு - அமைச்சர்களும் சேனைகளும் கூடிய பெருவெள்ளத்தினையும், பிடரிமயிரினையுடைய குதிரை யணிவகுத்த வெள்ளத்தினையும், மத்தகத்தையுடைய யானையணிகளின் வெள்ளத்தினையும், மேற்கொண்டருளும் அலங்காரத்தினையுடைய பெண்யானைகளின் வெள்ளத்தினையும், விரும்பும் சோற்றுப் பெருக்கங்களாகிய வெள்ளத்தினையும் கண்டு; அசைவில்.....அணைந்தார் - கெடாத இன்பவெள்ளத்திலே முழுகிக் கொடுங்கோளூரினை அணைந்தார்கள் (நம்பிகளும் சேரனாரும்).
(வி-ரை) இப்பாட்டினால் நாட்டில் அரசாங்க அமைப்பில்வரும் வரவேற்புக்கள் கூறப்பட்டது. முன்பாட்டிற் கூறியது நாட்டில் அங்கங்கும் மக்கள் செய்தவரவேற்பு.
திசைகள் தோறும் வரும்பெருமை - கண்டு - என்க. முன்பாட்டிற் கூறியபடி மக்கள் வரவேற்புச் செய்ய திசைகள் தோறும் அவ்வாறே கண்டு என்பதாம்.
வெள்ளம் - சொற்பொருட் பின்வரு நிலையணி. அவ்வவற்றின் மிகுதிப்பாடு என்ற பொருளில் வந்தது.
அமைச்சர் சேனைப் பெருவெள்ளம் - அரசர் வரும்போது சேனைகள் அணிவகுத்து நிற்றலும், அவற்றை அவர் கண்காணித்து மேம்படுத்தலும் மரபாம். இம் மரபு இந்நாளிலும் காணப்படும். (Guard of Honour) என்பார்.
குசை - குதிரைப் பிடரி மயிர்; கடிவாளம் என்பாரு முண்டு.
வாசி - குதிரை; கும்பம் - மத்தகம் பண்ணுதல் - அலங்கரித்தல்; மிசைகொள் - மேலே உட்காரும்படி; கொள் - கொள்ளத்தக்க; “பண்ணும்பிடிமேல்Ó (3894); பண்ணும் - பிடிவெள்ளம் - இவைகள் உயர்ந்த பெரியோர்களை மேல் ஏற்றி எழுந்தருளுவிக்க உதவுவன; பிடிமேல் ஏற்றுதல் மரபு; ஆண்யானைகள் (களிறு) சில போது மதங்கொண்டு தீங்கு விளைத்தலும் கூடுமென்ற உட்கிடையும் கொண்டது இவ் வழக்கு.
மேவுஞ் சோற்று வெள்ளம் - அங்கங்கும் பெருஞ் சோறூட்டுதல் மலைநாட்டில் முறைப்பட இன்றும் நிகழ்வது. இவ்வெல்லா வெள்ளங்களையும் கண்டு - என்க. எண்ணும்மைகளும் முற்றும்மையும் தொக்கன.
அசைவு - குன்றுதல்; கேடு.