கொடுங்கோ ளூரின் மதில்வாயி லணிகோ டித்து மறுகிலுடுத் தொடுங்கோ புரங்கண் மாளிகைகள் சூளி குளிர்சா லைகடெற்றி நெடுங்கோ நகர்க ளாடரங்கு நிரந்த மணித்தா மங்கமுகு விடுங்கோ தைப்பூந் தாமங்க ணிரைத்து வெவ்வே றலங்கரித்து. | 144 | (இ-ள்) கொடுங்கோளூரில்...கோடித்து - கொடுங்கோளூரில் மதில் வாயிலினை அணிகளால் அலங்கரித்து; மறுகில்....ஆடரங்கு - வீதிகளில் விண்மீன்களை அளாவ உயர்ந்த கோபுரங்கள், மாளிகைகள், நிலா முற்றங்கள், குளிர்ந்த சாலைகள், திண்ணைகள், நீண்ட அரச நகர்கள், ஆடரங்குகள் என்ற இவற்றை; நிரந்த.....வெவ்வேறலங்கரித்து - நெருங்கிய மணிமாலைகள், கமுகு, தொங்கவிட்ட பூமாலைகள் முதலியவற்றால் வரிசைப்பட வெவ்வேறு விதமாகத் தனித்தனி அலங்காரம் செய்து, (வி-ரை) இப்பாட்டினால் அரசரது தலைநகராகிய கொடுங்கோளூரின் அணி செய்து எதிர்கொண்ட சிறப்புக் கூறப்பட்டது. மதில்....கோடித்து - நகர மதில்வாயிலாதலின் இதனை அணி செய்தமை வேறு கூறப்பட்டது. கோடித்தல் - அலங்கரித்தல்; வகுத்தல். உடுத் தொடும் - உடு - விண்மீன்; நட்சத்திரம் - தொடுதல் - அவற்றின் எல்லை அணுகுதல் போல உயர்தல். சூளி - நிலா மணி முற்றங்கள்; உயர்வு நவிற்சி; தெற்றி - திண்ணை. (சூளிகை - மேல்வீட்டின் முகப்பு). குளிர்சாலைகள் - குளிர்ச்சி பொருந்திய சாலைபோன்ற அமைப்புக்கள். கோநகர்கள் - அரசரது தனி யிருப்பிடங்கள். ஆடரங்கு - மகளிர் ஆடும் அரங்கம்; மேடை; நடன சாலை. விடுங்கோதைப் பூந்தாமம் - அளவும் வரிசையும்படத் தொங்கவிடும் பூமாலைகள். கோதை - ஒழுங்கு; ஒழுங்குபட அமைத்த மலர்மாலை என்க; மணித்தாமம் - அரதனமாலைகள்; கோதை முதலாகிய தாமங்களின் மிகுதி. நிரைத்தல் - வரிசையாக ஒழுங்கு படுத்துதல். வெவ்வேறு - பலவகை. அலங்கரித்து - நகரமாந்தர் எதிர்கொள்ள - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. |
|
|