பாடல் எண் :3892

நகர மாந்த ரெதிர்கொள்ள நண்ணி யெண்ணி லரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள் பாடி யாட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார் சென்று திருவஞ் சைக்களத்து
நிகரி றொண்டர் தமைக்கொண்டு புகுந்தா ருதியர் நெடுந்தகையார்
145
(இ-ள்) நகர மாந்தர்.....நண்ணி - இவ்வாறு நகரத்தின் மக்கள் எதிர்கொள்ள வந்து சேர்ந்து; எண்ணில்.....அணைவார் - அளவில்லாத ஆடரங்குகள் தோறும் மகரக்குழையையணிந்த பெண்கள் பாடி ஆட, அழகிய வீதியில் அணைவராகி; சிகர......அணையார் - சிகரங்களை யுடைய பெரிய (தமது) திருமாளிகையிற் சேராராய்; சென்று....நெடுந்தகையார் - மேலே போய்த் திருவஞ்சைக்களத்தில் ஒப்பற்ற திருத்தொண்டராகிய நம்பிகளை உடனே கொண்டு சேரர் பெருமானார் புகுந்தனர்.
(வி-ரை) நகரமாந்தர் எதிர்கொள்ள - முன்பாட்டிற் கூறியவை அரசர் பரிசனங்களின் வேறாய் நகர மக்கள் அரச நகரினைச் செய்த அணிவகை என்பதாம்..
அரங்கு - ஆடரங்கு. “அரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவை யாறேÓ (தேவா.) மாதர்கள் பாடிஆட - எதிர்கொண் டுபசரிக்கும் வகை.
சிகர......அணையார் - பதியிலணைந்தவுடன் முதலில் திருக்கோயிலிற் சென்று வழிபட்டபின்னரே திருமடத்திற் கெழுந்தருளுதல் அடியார்களின் மரபு என்பதனைப் புலப்பட எடுத்துத் கூறியபடி. அணையார் - அணையாராய்; முற்றெச்சம்; அணையார் - புகுந்தார் என்க.
சென்று - வடக்கினின்றும் போந்த அரசர் முதலில் தமது தலைநகராகிய கொடுங்கோளூரையடைந்தும், அங்கு உள்ள தமது அரண்மனையிற் சேராராய் அங்கு நின்றும் ஒருநாழிகை யளவில் உள்ள தமது வழிபடு கடவுளின் திருவஞ்சைக்களத்திற்குச் சென்று, திருவஞ்சைக்களத்துட் புகுந்தார் என்க - ஏழனுருபு விரிக்க. நிகரில் தொண்டர் - வன்றொண்டராகிய நம்பிகள்; திருத்தொண்டத் தொகையினை அருளி உலகை உய்விக்கும் தொண்டர் என்பது குறிப்பு.
உதியர் - சேரர். நெடுந்தகை - பெருந்தகை; அரசர்.