தொழுது திளைத்துப் புறம்போந்து தோன்றப் பண்ணும் பிடிமேற்பார் முழுது மேத்த நம்பியைமுன் பேற்றிப் பின்பு தாமேறிப் பழுதில் மணிச்சா மரைவீசிப் பைம்பொன் மணிமா ளிகையில்வரும் பொழுது மறுகி லிருபுடையு மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார், | 147 | (இ-ள்) தொழுது...புறம்போந்து - இறைவரைத் தொழுது அவ்வானந்தத்தில் மூழ்கிப் புறத்திற் போந்து; தோன்றப் பண்ணும்....பொழுது - (சேரமான் பெருமாள் நாயனார்) உலா விளங்க அலங்கரித்த பிடியின்மேல் உலகமெல்லாம் போற்றும்படி நம்பிகளை முன்பு ஏற்றிப் பின்பு தாமும் ஏறிக் குற்றமில்லாத அழகிய சாமரைகளை வீசிப் பசிய பொன் அணிகள் செய்யப்பட்ட மணிமாளிகையின் கண் வரும்போது; மறுகில்...புகல்கின்றார். - வீதியில் இருபுறமும் நெருங்கிய மக்கள் இவ்வுலாக் கண்டு வாழ்த்திச் சொல்வார்களாகி, (வி-ரை) தோன்றப் பண்ணும் பிடி - மேலூர்ந்து உலாவருதற் பொருட்டு உரிய அமைப்புக்களுடன் (அம்பாரி) அலங்கரிக்கப்படும் பெண்யானை. “மிசைகொள் பண்ணும் பிடிÓ (3890) என்று முன்கூறியது காண்க. பண்ணும் - மரபு வழக்கு, நம்பியை முன்பு ஏற்றி - முன்பு முதலில் என்றும், முன்புறமாக விளங்க என்றும் உரைக்க நின்றது . பின்பு - என்றதும் இவ்வாறே; பின்பு தாம் ஏறி - தாம் ஏறியது உபசரித்தற் பொருட்டு. தாமும் என்ற உம்மை தொக்கது. மணிச்சாமரை வீசி - யானையின்மேல் பின் இருந்து துணைக் கவரி வீசி உபசரிக்கும் வழக்கு இன்றும் மலைநாட்டில் நிகழ்வது. இவ்வாறு நம்பிகளுக்குச் சேரனார் செய்த உலா வழிபாட்டு உபசரிப்பினையே இது கேட்ட அநபாயச் சோழர் இந்நூலாசிரியர் பெருமானுக்குச் செய்தனர் என்பதை எந்தம் ஆசாரியப் பெருந்தகையார் உமாபதி சிவனார், “செரிமதயா னைச்சிரத்திற் பொற்கலத்தோ டெடுத்துத் திருமுறையை யிருத்தியபின் சேவையர்கா வலரை முறைமைபெற வெற்றியர சனுங்கூட வேறி முறைமையினா லிணைக்கவரி துணைக்காத்தால் வீச மறைமுழங்க விண்ணவர்கற் பகப்பூ மாரி மழைபொழியத் திருவீதி வலமாக வரும்போ திறைவர்திரு வருளைநினைந் தடலரசர் கோமான் இதுவன்றோ நான்செய்த தவப்பயனென் றிசைத்தான்Ó - திருத்தொண்டர் புராண வரலாறு - (77) என்று விரித்தருளிய திருவாக்கினால் உணர்த்தி யருளுதல் ஈண்டு நினைவு கூர்தற் பாலது. மாளிகையில் - மாளிகையிற் குறித்த பகுதியில். புகல்கின்றார் - முற்றெச்சம். புகல்கின்றாராகி. என்பார் - உரைப்பார் - தொழுவார் - (3894) வியப்பார் - பாவும் (3895) என மேல்வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க. வாழ்த்திப் புகலும் வகை மேற்பாட்டுக்களிற் காண்க. |
|
|