பூவும் பொரியும் பொற்றுகளும் பொழிந்து பணிவார்; “பொருவிலிவர் மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதÓ மெனவியப்பார்; பாவுந் துதிக ளெம்மருங்கும் பயில வந்து மாளிகையின் மாவுங் களிறு நெருங்குமணி வாயில் புகுந்து மருங்கிழிந்தார். | 149 | (இ-ள்) பூவும்....பணிவார் - மலர்களையும் பொரியினையும் பொன் துகளினையும் கலந்து வீசிப் பணிவார்கள்; பொருவில் இவர்....வியப்பார் - தமக்கு ஒப்பில்லாத இவர் பொருந்திய காவிரித்திருநாடே உலகுக்குத்திலதம்போல விளங்குவதாம் என்று வியந்து கூறுவார்கள்; பரவும்..வந்து - இவ்வாறு பரவுகின்ற துதிகள் எப்பக்கத்திலும் மிக்கிருக்க வந்தணைந்து; மாளிகையின்....மருங்கு இழிந்தார் - திருமாளிகையின் குதிரைகளும் யானைகளும் நெருங்குகின்ற மணிவாயிலினுட் புகுந்து பக்கத்தே இறங்கினார்கள் (சேரனாரும் தோழனாரும்). (வி-ரை) பூவும்....பொழிந்து - மலர்களும் பொரியும் பொற்பூவும் இட்டு வணங்கும் மரபு குறித்தது. முன் “பொலஞ் சுடர்ப்பூÓ (3889) என்றதும் காண்க. ஆண்டுரைத்தவை வழியிடை எழுச்சியில் எதிர்கொண்டு நாட்டு மக்கள் வீசி மகிழ்ந்தவை; இங்குக் கூறியது நகரமாந்தர் வணங்குதற் பொருட்டு இட்டவை; பொழிந்து - மிகுதி குறித்தது. பணிவார் - இவர்கள் முன்னர்த் தொழுவார் என்றவரின் வேறாய், அதன்மேலும் உரியபடி வழிபடும் ஒரு சாரார்; தொழுதல் - அஞ்சலித்தல்; பூத்தூவிப் பணிதல் -அதனினும் சிறந்த வழிபாடு; பணிதல் - நிலமுற வீழ்ந்து வணங்குதல். பொருவில்......திலதம் என வியப்பர் - இவர் வருதலினால் இங்கு நமது நாடு நாடாயிற்று; இவர் எப்பொழுதும் மேவும் நாடே உலகிற்கு அணி செய்வது என்று வியந்து துதிப்பார் மற்றுமொரு சாரார்; ஏகாரம் பிரிநிலை. “தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளேÓ (தேவா) என்றபடி தம்மையும் தமது நாட்டையும் மறந்து இவரையும் இவர் வாழுநாட்டையுமே எண்ணி ஈடுண்டநிலையிற் பெரிதும் உறைப்புப் பெற்ற இவர்கள் வேறுமொரு சாரார்; இவ்வாறு இவர்களின் வைப்புமுறை ஆய்ந்துகொள்ளத்தக்கது. முன் (171 - 172; 2701 - 2707) முதலிய இடங்களில் கூறியவற்றின் கருத்துக்களையும் ஈண்டு நினைவு கூர்க. பாவும் - பரவுகின்ற; விரிக்கின்ற; பாவுதல் - விரித்தல். மாளிகையின் வாயில் புகுந்து - இஃது யானை முதலிய வாகனங்களுடனே வந்து சாரும் மாளிகைப் பெருவாயில்; Portico என்பர். மாவும் களிறும் நெருங்கும் - இவை இருபுறமும் அணிவகுத்து நின்றவை; இயல்பு குறித்ததென்றலுமாம். |
|
|