பெருமாள் வேண்டவெதிர்மறுக்க மாட்டா ரன்பின்பெருந்தகையார் திருமா நெடுந்தோ ளுதியர்பிரான் செய்த வெல்லாங் கண்டிருந்தார், அருமா னங்கொள் பூசனைக ளடைவே யெல்லா மனித்ததற்பின் ஒருமா மதிவெண் குடைவேந்த ருடனே யமுது செய்துவந்தார். | 152 | (இ-ள்) பெருமாள்...மறுக்கமாட்டார் - சேரமான் பெருமாள் விண்ணப்பிக்க அதனை எதிர்மொழி கூறி மறுக்கமாட்டாராகி; அன்பின்......கண்டிருந்தார் - அன்பினாலே பெருந்தகைமை யுடையாராகிய நம்பிகள் திருப்பொருந்திய நெடிய தோள்களையுடைய சேரர்பெருமான் செய்தனவற்றை யெல்லாம் கண்டு இருந்தனர்; அருமானம் கொள்....அளித்ததற்பின் -அரியபெரிய பூசனைகள் எல்லாவற்றையும் முறைப்படி அவர் செய்த பின்பு; ஒருமா.....அமுது செய்து வந்தார் -ஒப்பற்ற முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையினையுடைய சேரமன்னருடனே இருந்து திருவமுது செய்து மகிழ்ந்தருளினர். (வி-ரை) எதிர் மறுத்தல் - எதிர்மொழி கூறி மறுத்தல். அன்பிற் பெருந்தகையார் - நம்பிகள்; பெருந்தகையார் ஆதலின் என்று காரணக் குறிப்புப் படநின்றது. திருமா நெடுந்தோள் - திருமகள் நீங்காது வாழ்ந்திருக்கும் நீண்ட தோள்கள்; செய்த - செய்த உபசரிப்புச் செயல்கள்; அகர ஈற்றுப் பலவின்பால் வினையாலணையும் பெயர். கண்டிருந்தார் - தமக்கு உடன்பாடின்றி யிருந்தும் பெருமாளை மறுக்கமாட்டாது நோக்கியிருந்தனர். அருமானங் கொள்பூசனைகள் - மலர்களால் அருச்சித்தல், சாந்து முதலியவை சாத்துதல், தூபதீப மேந்துதல் முதலாயினவாய் மாகேசுவர பூசைக்குரிய பூசைகள்; மானம் - பெருமை; அருமை - பிறரெவராலும் செய்தற்கருமையாய் ஆரசராற் செய்யப்படுந் தன்மை. அடைவே - செய்யப்படும் முறையில் முற்றும். உடனே அமுதுசெய்து உவந்தார் - இருவரும் ஒக்க உடனிருந் தமுது செய்தமை பற்றி முன் (3822 - 3823) உரைத்தவை பார்க்க. பூசை முறைகளை மறுக்கமாட்டாது கண்டிருந்த மட்டில் அமைந்தருளிய நம்பிகள், உடனமுது செய்த இதனை உவந்தார் என்ற குறிப்புமது; அடியாருடனிருந் தமுது செய்தல் மிக்கஇன்பம் தருவதாம். சிறுத்தொண்ட நாயனார் புராண வரலாறும் காண்க. |
|
|