சேரருடனே திருவமுது செய்த பின்பு கைகோட்டி ஆர நறுமென் கலவைமான் மதச்சாந் தாடை யணிமணிப்பூண் ஈர விரைமென் மலர்பணிக ளினைய முதலா யினவருக்கம் சார வெடுத்து வன்றொண்டர்ச் சாத்தி மிக்க தமக்காக்கி, | 153 | (இ-ள்) சேரருடனே.....பின்பு - சேரனாருடனே ஒக்க இருந்து திருவமுது செய்தபின்பு; ஆரம்.....வருக்கம் - ஆரங்களும், மணமுடைய சந்தனங் கலந்த கத்தூரிச் சாந்தும், ஆடையும் அணிகின்ற மணிப்பூண்களும் குளிர்ந்த மணமுடைய மெல்லிய மலர்மாலைகளும் என்ற இவை முதலாகிய வருக்கங்களை; கைகோட்டி -தமது கையை வளைத்து; சார எடுத்து....சாத்தி - சாரும்படி எடுத்து வன்றொண்டர்க்குச் சாத்தியும்; மிக்க தமக்காக்கி - எஞ்சியவற்றைத் தமக்குப் பயன்படுத்தியும். (வி-ரை) கைகோட்டிச் சாத்தி - என இயையும்; கோட்டுதல் - வளைத்தல்; கலவை சாத்துதல் பணிகள் - ஆடை சாத்துதல் முதலிய பணிவிடைகள் செய்தற்கண் கையை ஏற்றவா றெல்லாம் வளைத்தல் செய்தல்; கைகோட்டி என்பதற்கு அமுதுண்டபின் விதிப்படி கை சுத்தி செய்து என்றுரைப்பாரு முண்டு; கைகோட்டுதல் - கைசுத்தி செய்தலுக்கு வரும் வழக்குச்சொல். ஆரம் - சந்தனம்; மென்கலவை - கடுமையாகவன்றி மெல்லிதாய் இனிதாய்க் கமழும் கலவை. அணி மணிப்பூண் - அணி - அணிகின்ற; மணி - மணிகளைக் கொண்ட மலர்ப்பணி - மலர்மாலை. வருக்கம் - வகை; அணியும் பண்டங்களின் வகைகளை வருக்க மென்பது மரபு வழக்கு, வன்றொண்டர்ச் சாத்தி மிக்க தமதாக்கி - முதலில் நம்பிகளுக்குத் தாமேசாத்தி, எஞ்சியவற்றை அவரது திருவருட் பிரசாதமாகத் தமக்கு ஆகச் செய்து; ஆகச் செய்தல் - அணிதல்; சாத்தி -ஆக்கி - நிகழ - வைகுவித்து மகிழ்ந்தார என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. உம்மைகள் விரிக்க. |
|
|