பாட லாட லின்னியங்கள் பயிறன் முதலாம் பண்ணையினின் நீடு மினிய விநோதங்க ணெருங்கு காலந் தொறுநிகழ மாடு விரைப்பூந் தருமணஞ்சே யாரா மங்கள் வைகுவித்துக் கூட முனைப்பா டியர்கோவைக் கொண்டு மகிழ்ந்தார் கோதையார். | 154 | (இ-ள்) பாடலாடல்.....இகழ - பாடலும் ஆடலும் இனிய நயங்கள் பயிலுதலும், முதலாகப் மகளிர் விளையாட்டில் நீடும் இனிய விநோத நிகழ்ச்சிகளும் செறிவுடைய காலங்கள் தோறும் நிகழ்த்தியும்; மாடு.....வைகுவித்து பக்கங்களில் மணமுடைய பூக்களால்மரங்கள் மணம்வீசும் சோலைகளில் அமர்வித்தும்; கூட...கோதையார் - தம்முடனே திருமுனைப்பாடி நாட்டுத் தலைவர் பெருமானாகிய நம்பிகளையும் கொண்டு பெருமாக் கோதையார் என்னும் சேரலனார் மகிழ்ந்தருளினர். (வி-ரை) முன்பாட்டிற் கூறியவை திருமேனிப் பாங்காக இன்பஞ் செய்வன; இப்பாட்டிற் கூறுபவை மாளிகை முன்றிலிலும் புறத்து அணிய சோலைகளிலும் கேட்டும் கண்டும் உயிர்த்தும் உற்றும் நுகர்தல் செய்வன. பண்ணை - மகளிர் கூட்டம் (நிகண்டு). இனிய விநோதங்கள்- இனிமை தரும் விளையாட்டு நிகழ்ச்சிகள்; நாடகம் வரிக்கூத்து முதலியன. தெருங்கு காலம் - இடையறாத காலங்கள். மாடு....ஆராமங்கள் - ஆராமம் - பூஞ்சோலை; இவை திருமாளிகையின் பக்கம் மலர் மரங்களை அணிபெற ஆக்கி அமைத்த சோலைகள்; செல்வர்களது மாளிகைத் தோட்டங்களில் இவ்வமைப்பு இன்றும் காணவுள்ளது. முனைப்பாடியர்கோ - நம்பிகள்; கோதையார் - பெருமாக் கோதையார் என்னும் சேரமான் பெருமாள் நாயனார்; அரசரது தகுதிக்கேற்ற நிலை குறிக்க நம்பிகளையும் கோ என்றார். கோதை - சேர அரசர் பெயர் வழக்கு மரபு. இவையெல்லாம் திருவடி மறவா நிலையிற் காணப்பட்டன என்பது முன் உரைக்கப்பட்டது. “நங்கள்பிரா னருள்மறவா நல்விளையாட்டுÓ (3872). |
|
|