பாடல் எண் :3902

செண்டாடுந் தொழின்மகிழ்வுஞ் சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடு மலர்வாவி மருவியநீர் விளையாட்டும்
தண்டாமும் மதகும்பத் தடமலைப்போர் சலமற்போர்
கண்டாரா விருப்பெய்தக் காவலனார் காதல்செய்நாள்,
155
(இ-ள்) செண்டாடும்....பெருஞ் சிறப்பும் - பந்தாடுகின்ற தொழிலின் மகிழ்ச்சியும், சிறு சோறுண்ணும் பெரிய சிறப்பும்; வண்டாடும் .விளையாட்டும் - வண்டுகள் ஆடுதற்கிடமாகிய மலர்கள் நிறைந்த வாவிகளி்ற் பொருந்திய நீரின் விளையாடுதலும்; தண்டா....போர் - குறைதல் இல்லாத மும்மதங்களையும் மத்தகத்தினையும் உடைய பெருமலை போன்ற யானையின் போரும்; சலமற்போர் - கோபத்துடன் புரியும் மல்யுத்தமும்; கண்டு - (என்னும் இவற்றைக்) காணச்செய்து; ஆரா....நாள் - நிறைவு பெறாத விருப்பம் பொருந்தும் படி சேரனார் நம்பிகளுக்கு மகிழ்ச்சி செய்யும் நாளில்,
(வி-ரை) இப்பாட்டினும் முன்பாட்டினும் கூறப்பட்டவை தமது தகுதிக்கேற்பப் பெருநிலையில் முடி அரசரால் தமது தோழனார் பொருட்டு வகுத்தவை; இவ்வாறே நம்பிகளால் வகுக்கப்பட்டவை [முன் (3873) உரைக்கப்பட்டவை] கூறப்பெற்றன; அவை குடிப்பெரியோரால் தகுதிக்கேற்ப வகுக்கப் பெற்றவை; ஒப்ப இருபாலும் தகுதிபெறச் கூறும் நிலைகளைக் கண்டுகொள்க.
செண்டு - “நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசிÓ (3873). ஒருவகை நீண்டு நுனி வளைந்த ஆடுகோல் என்றலுமாம்.
சிறுசோறு - சித்திரான்னம் என்பர்; இவை பல வகைப்பட்ட அன்னங்களை அமைத்துச் சிறுசிறு அளவில் வைத்து உண்ணப்படுதலின் சிறுசோறு எனப்பட்டது; சிறுசோறாயினும் பெருமகிழ்வு தருதலால் பெருஞ்சிறப்பு என்றார். சிறுசோறு - பிள்ளைகள் சமைக்கும் சோறு என்பாரு முண்டு.
நீர்வினையாட்டு - “கண்டுÓ என்றதனால் இது மகளிர் முதலிய பிறர் விளையாடுதலைக் குறித்தது; நீர் எறிந்து ஆடுதல், நீரினுள் ஒளிந்தாடுதல், நீந்துதல், மிதத்தல், முகம் பார்த்தல் முதலாக வரும் நீர்விளையாட்டுக்களைப் பற்றிப் பெருங்காவியங்களும் உண்டாட்டு - பொழில்விளையாட்டு நீர்விளையாட்டுக்களைக் கூறும் பகுதிகளுட் கண்டு கொள்க. வண்தாதும் - வண்மையாகிய மகரந்தமாகிய பூந்தாதுகளை வீசி விளையாடும் சிறப்புக்களும் என்றலுமாம். இது காப்பியங்களுட் கூறப்பட்டுள்ளது.
தண்டுதல் - குறைதல்; கும்பம் - மத்தகம்; குடும்பம் போன்றிருத்தலில் இப்பெயர் பெற்றது; தடமலை - மும்மதம் என்ற அடைமொழியினால் யானையினைக் குறித்தது. பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; தடமலைப்போர் - யானைப்போர்; இவை சிறந்தனவாகக் கொண்டாடப்படும்.
சலமற்போர் - சலம் - கோபம்; மல்போர் - மல்லர்கள் குத்தியும் இடித்தும் புரள்வித்தும் இவ்வாறு பொருதல். கண்டு - கண்காணித்து
காதல் செய்தலாவது - மகிழ்வித்தல்; காதலைப் பெறச்செய்தல்; செய்தல் - ஈண்டு உள்ளத்தின் மகிழ்வு குறித்த அளவில் நின்றது.