நாவலர்தம் பெருமானுந் திருவாரூர் நகராளுந் தேவர்பிரான் கழலொருநாண் மிகநினைந்த சிந்தையராய் “ஆவியையா ரூரானை மறக்கலுமா மேÓ யென்னும் மேவியசொற் றிருப்பதிகம் பாடியே வெருவுற்றார். | 156 | (இ-ள்)நாவலர்தம்......சிந்தையாராய் - நாவலர் பெருமானாராகிய நம்பிகளும் திருவாரூர் நகரினை ஆட்சிகொண்ட தேவர் தலைவராகிய இறைவரது திருவடிகளை ஒருநாள் மிகவும் நினைவிற்கொண்ட மனத்தினராகி; ஆவியை....வெருவுற்றார் - எனது உயிர் போன்றவரைத் திருவாரூர் இறைவரை மறக்கலுமாமே என்றகருத்தும் மகுடமு மமைந்த திருப்பதிகத்தினைப்பாடியே வெருவுற்றனர். (வி-ரை) நாவலர் தம் பெருமான் - நம்பிகள். மிக நினைந்த - எப்பொழுதும் இடையறாத நினைவுடையவராயினும் ஒருநாள் மிகவும் அழுந்திய நினைவுகொண்டு என்க. “ஆவியை ஆரூரானை மறக்கலுமாமேÓ என்னும் மேவிய சொல் - இது பதிகக் கருத்தும் மகுடமுமாம். பதிகமும் பதிகக் குறிப்பும் பார்க்க. ஆமே - ஏகார வினா, ஆகாது என எதிர்மறைக் குறிப்புப்பட நின்றது; இங்கு அரச போக அனுபவங்களினுள் இருத்தலால் ஆரூரானை மறக்கலாகுமோ? ஆகாது; ஆதலின் அங்குப் புறப்பட்டுச் செல்லுதல் வேண்டும் என்பது. மேல்வரும் பாட்டுப் பார்க்க. மேவிய - மகுடம் மேவிய; அழுந்திய கருத்துப் பொருந்திய; சொல் - சொல்லினாலே வெளிப்பட்ட. |
|
|