பாடல் எண் :3904

திருவாரூர் தனைநினைந்து “சென்று தொழு வேÓ னென்று
மருவார்வத் தொண்டருடன் வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார் பிரிவாற்றார் பின்செல்வார்,
157
(இ-ள்) திருவாரூர்....என்று (நம்பிகள்) திருவாரூரினை நினைந்து கொண்டு அங்குச் சென்று தொழுவேன் என்று மேற்கொண்டு; மருவு ஆர்வம்...பொழுதில் - பேரன்பினைப் பொருந்திய திருத்தொண்டர்களுடனே பயணப்பட்டுச் செல்ல எழுந்தபோது; பெருவானவரம்பனார் - பெரிய சேரமான் பெருமாள் நாயனார்; ஒருவா...கைதொழுது - நீங்காத நண்பினாலே மனம் உள்ளுருக அவருடனே எழுந்து கை கூப்பித் தொழுது; பிரிவாற்றார் பின் செல்வார் - பிரிவாற்றாது அவர் பின் செல்வாராகி,
(வி-ரை) நினைந்து - என்றும் மறவாத நினைப்புள்ளாராயினும் அன்று மிகவும் அழுந்த நினைந்து என்றபடி. “மிக நினைந்துÓ (3903).
சென்று தொழுவேன் - இங்கு இருந்தபடியே தொழவல்லேனாயினும் அதனோடமையாது அங்குச் சென்று வணங்குவேன்.
மருவு ஆர்வம் - ஆர்வம் - பேரன்பு ஆர்வம் மருவு என்க. “அன்பீனுமார்வமு மீனும் அதுவீனும், நண்பென்னு நாடாச் சிறப்புÓ (குறள்); தொண்டர் - நம்பிகளுடன் போதும் அடியார்களும் பரிசனங்களும்.
வழிக்கொண்டு - செல்பொழுது - பயணமாகப் புறப்படும்போது.
ஒருவா நண்பு - நீங்காத - பிரியாத - நட்பு. உள் உருக - மனம் நைய; மனம் உடைந்துருக.
வானவரம்பனார் - சேரர்களது மரபுப் பெயர். பின்செல்வார் - பின் செல்வாராகி; முற்றெச்சம். பின்செல்வார் - என்ன - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.