மற்றவரும் பணிந்திசைந்தே, மந்திரிக டமையழைத்துப் “பொற்புநிறை தொன்னகரி லிற்றைக்கு முன்புகுந்த நற்பெரும்பண் டாரநா னாவருக்க மானவெலாம் பற்பலவா மாளின்மிசை யேற்றிவரப் பண்ணுÓ மென, | 161 | (இ-ள்) மற்றவரும் பணிந்து இசைந்தே - அது கேட்டபின் மற்று அவ்வரசரும் வணங்கி அதற்கு இசைந்தே; மந்திரிகள் தமை அழைத்து - மந்திரிகளை அழைத்து; பொற்பு நிறை...பண்ணும் என - அழகு நிறைந்த பழைய இந்நகரில் இன்றையநாளுக்கு முன்னே சேர்ந்த நல்ல பெரிய நிதியம் பல வருக்கங்களாக உள்ளவற்றை யெல்லாம் பற்பல வகையாகும் ஆள்களின் மேல் ஏற்றிக் கொண்டுவரச் செய்யுங்கள் என்று ஆணையிட, (வி-ரை) பணிந்து இசைந்தே - பணிதல் - தமக்குடன்பா டன்றாயினும் அவர் பணி மறுத்தற்கஞ்சி உடன்படுதல் குறித்தது. பண்டாரம் - நிதியறையில் சேமத்தில் உள்ள நிதிகள்; நானா வருக்கம் - பொன் - மணி - பூண் - துகில் முதலிய பலவகைகள்; மேற்பாட்டில் விரித்தல் காண்க. நல் பெரும் - என்றவற்றுள் நன்மையாவது அறத்தாற்றி னீட்டப்பட்ட தன்மையினையும், பெருமை - சிறப்பாலும் விலையாலும் உள்ள மேம்பாட்டினையும் குறித்தன. எலாம் - எல்லாவற்றையும்; முற்றும்மைதொக்கது; இற்றைக்கு முன்புகுந்த - இந்நாள் வரை சேர்ந்த; கூடிய; பாணபத்திரர்க்குக் கொடுத்தபின் இதுவரை என்பதாம்; ஆன - மேலாயின. பற்பலவாம் ஆளின் மிசை - பல என்ற அஃறிணைப் பலவறிசொல் ஆட்களின் வகையினைக் குறித்தது. அவை பற்பலவாவன - அவற்றை என்று பிரித்துரைத்தலுமாம். ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் - பல ஆட்கள் சுமக்கும்நிலை மிகுதியும் தொகையும் குறித்தது. என - என்று ஆணையிட; என - அவரும் கொண்டணைந்தார் என வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|