பாடல் எண் :3909

ஆங்கவரு மன்றுவரை யாயமா கியதனங்கள்
ஓங்கியபொன் னவமணிக ளொளிர்மணிப்பூண் டுகில்வருக்கம்
ஞாங்கர்நிறை விரையுறுப்பு வருக்கமுத னலஞ்சிறப்பத்
தாங்குபொதி வினைஞர்மேற் றலமலியக் கொண்டணைந்தார்.
162
(இ-ள்) ஆங்கு அவரும் - அவ்வாறே அம்மந்திரிகளும்; அன்றுவரை.... வருக்கம் முதல் - அன்று வரையில் ஆயமாகக் கூடிய நிதியங்களும், விலையுயர்ந்த பொன்னும், நவமணிகளும், ஒளிவீசும் மணிகள் கொண்ட பூண்களும், ஆடைவகைகளும் பக்கங்களிலே செறிந்த வாசனைத் திரவியங்களின் வகைகளும் இவை முதலாகியவற்றை; நலஞ்சிறப்ப....அணைந்தார் - நன்மையாற் சிறந்து விளங்கும்படி தாங்கும் பொதிகளாக்கி அதற்குரிய ஆள்களின்மேல் ஏற்றி நிலநிறையக் கொண்டுவந்து அணைந்தார்கள்.
(வி-ரை) அன்றுவரை ஆயம் ஆகிய - இற்றைக்கு முன்புகுந்த என்ற ஆணையின்படியே அன்று வரையிலுங் கூடிய; ஆயம் . அரசர் கொள்ளும் பகுதிப்பொருள் முதலாயின; ஆயம் - கூட்டம் என்றலுமாம்.
ஞாங்கர் - அவ்விடத்தில்; பக்கத்தே; விரை - வாசனைப் பண்டங்கள்; நிறை - செறிவு குறித்தது. கத்தூரி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ முதலியன.
நலம் சிறப்ப - முன்னமே உள்ள நன்மை மேலும் சிறந்து விளங்க; இறைவர் இவற்றைக் கொண்டு, பின் தம்மதாக ஆக்கிக்கொடுக்கும் நலம், பின் வரலாற்றுக் குறிப்புமாம்.
பொதிதாங்கு வினைஞர் - என்க; தலமலிய - நிலப்பரப்பு நிரம்ப.