பாடல் எண் :3910

மற்றவற்றின் பரப்பெல்லாம் வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு, முனைப்பாடித் திருநாடர்,
பொற்பதங்கள் பணிந்தவரைத் தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்புயர்தோ ளுறத்தழுவி விடையளித்தார் வன்றொண்டர்.
163
(இ-ள்) மற்றவற்றின்....செலவிட்டு - மற்று அந்நிதியங்களின் பரவிய பொதிக ளனைத்தையும் வன்றொண்டர் தமது பரிசனங்களின் மூலம் முன்னே செல்லும்படி ஏவிவிடுத்து; பொற்பதங்கள் பணிந்தவரை - தமது பொன்னார் திருவடிகளை வணங்கிய சேரமானாரை; முனைப்பாடி திருநாடர் வன்றொண்டர் - முனைப்பாடித்திரு நாடாராகிய வன்றொண்டர்; தொழுது எடுத்து....விடையளித்தார் - தாமும் எதிர்வணக்கஞ்செய்து முகந்தெடுத்து அணிந்த மாலையினையுடைய மலைபோன்றுயர்ந்த தோள்களைப் பொருந்தத் தழுவிக்கொண்டபின் விடைதந் தருளினர்.
(வி-ரை) மற்று அவற்றின் பரப்பு எல்லாம் - அவற்றின் - தாம் ஏவியவாறே மந்திரிகள் கொணர்ந்த அந்த நிதிகளின் என முன்னறிசுட்டு. மற்று என்பதும் அப்பொருட்டு.
வன்றொண்டர் தமது பரிசனம் என ஆறனுருபு ஒன்றன் கூட்டம் பிறிதின் கிழமைப் பொருளது.
செலவிட்டு - செல்லும்படி அமைவு செய்து ஏவி விடுத்து.
செலவிட்டுப் பணிந்தவரைக் - திருநாடர் - வன்றொண்டர் - எடுத்துத் தழுவி - விடையளித்தார் - என்று கூட்டி முடிக்க.
நாடராகிய வன்றொண்டர் என்க.
வன்றொண்டர் - வன்றொண்டர் - வன்றொண்டரை வன்றொண்டராகிய சிறப்புப் பற்றியே பெருமாளும் நினைந்து வழிவிடுத்தனர் என்பார் இருமுறை அப்பெயராலே கூறினார்; பின்னர்த் திருமுருகன் பூண்டியினில் இறைவர் வலிந்தாட்கொள்ள நிற்பதும், இவரும் வலிந்து தோழமைத் திறத்தாற் பாடியடையயும் வரும் சரித நிகழ்வுக் குறிப்பும்பட நின்றது.
புனையலங்கல் வெற்புயர் தோள் உற - சேரனாரது வெற்புயர் தோள்கள். தமது அவ்வாறே வெற்புயர் தோள்களை பொருந்த உறும்படி என இருவழியும் கொள்க. “செவ்வரைபோற் புயமிரண்டுஞ் செறியப் புல்லிÓ (701) என்றதும், ஆண்டுரைத்தவையும் நினைவு கூர்க.
விடையளித்தார் வன்றொண்டர் - அவர் தாமே விடைபெற்று நிற்கலாற்றாது பின் தொடர்ந்து வருதலின், அவரை நிறுத்துதல் வேண்டித் தாமாகவே அவருக்கு விடை தந்து நிறுத்தினர் என்பார் அவர் விடைகொண்டார் என்னாது வன்றொண்டர் விடை அளித்தார் என்றார். மேலும் “ விடையருளிÓ என்பது காண்க.