பாடல் எண் :3911

ஆரூர ரவர்தமக்கு விடையருளி யங்ககன்று
காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்.
164
(இ-ள்) ஆரூரர்.....கடந்தருளி - நம்பிகள் அவருக்கு விடை கொடுத்தருளி அந்நகரினின்றும் நீங்கிச் சென்று மேகங்கள் தவழும் மலைகளையுடைய அந்நாட்டினைக் கடந்தருளி; கற்சுரமும்....கழிய - கற்சுரங்களும் நீர் பெருகுகின்ற காட்டாறுகளும் நீண்ட கானங்களும் பலகழியச் சென்று; சீரூரும்......செல்கின்றார் - சிறப்புப் பொருந்திய திருமுருகன் பூண்டியிற் சேரும் வழியிலே செல்கின்றாராய்,
(வி-ரை) அங்கு அகன்று - கொடுங்கோளூர் என்றும் அந் நகரினின்றும் நீங்கி; நீக்கப்பொருளில் வரும் ஐந்தனுருபு தொக்கது.
மலை நாடு கடந்தருளி - நகர் நீங்கிச் சென்று நாட்டினையும் கடந்து.
கற்சுரமும்.......கழிய - கற்சுரமும் - பருக்கைக்கற்களின் மிகுதிகொண்டு சிறு தூறு களையுடைய சிறு கானங்கள்; நீர் ஊரும் கான்யாறு - மழைக்காலத்தில் மிக்க நீர்பெருகும் காட்டாறுகள்; நெடுங்கான் - நீண்ட மரங்கள் அடர்ந்த காடுகள்; பலகழிய - இவ்வாறுள்ள பல இடங்கள் கழிந்து செல்ல; மலை நாட்டெல்லைக்கும் கொங்கு நாட்டுக்கு மிடையில் கோழிக்கூடு என்னும் கள்ளிக்கோட்டையினின்று மேற்றிசை வழியாய் வரும் இப் பழம்பெரும் வழியிடை இந் நிலப்பகுதி இவ்வாறே இன்றும் காணவுள்ளது. கற்சுரம் என்றது மலைச்சுர நோய் உள்ள நிலம் என்ற குறிப்பும் தந்து நின்றது. சுரம் - பாலை நிலம் பலகழிய - இவைகள் மனிதர் கடந்து செல்லுதல் கடினமாதலும், நோய்வரும் நிலங்களாதலும், புலி யானை முதலிய துட்ட மிருகங்கள் வாழு மிடங்களாதலும், பிறவும் கருதி இவற்றை நம்பிகள் கடந்து சென்றார் என்று கூற மனமின்றி இவை (தாமே) கழிய என்றார். வழிச் செல்லுங்காலும் நம்பிகளது திருமனம் இவற்றின்றி இறைவன்பால் நின்றதாதலின் இவ் விடங்கள் அவரது புலன் அனுபவத்துள் வாராது தாமே கழிந்தன என்றதும் பொருள்.
சீரூரும் - தலவிசேடம் பார்க்க: இனி இங்கு இறைவர் தந்தருளவுள்ள அருட் சிறப்பும் பொருட்சிறப்புமாகிய வரலாற்று முற்குறிப்புமாம்; ஊர்தல் - மிகுதல்; மேற்கொள்ளுதல்.
திருமுருகன் பூண்டி வழிச் செல்கின்றார் - அப்பதிக்குச் செல்லும் வழியிலே போவராகி; செல்கின்றார் - செல்கின்றாராகி; முற்றெச்சம். செல்கின்றார் - செல்கின்ற போழ்தின்கண் என வரும் பாட்டுடன் முடிக்க. (ஆரூரர்) செல்கின்றார் என வினைப் பெயரெனினுமாம்
செலவணைந்தார் - சென்றணைந்தார் - என்பனவும் பாடங்கள்.