பாடல் எண் :3913

வென்றிமிகு பூதங்கள் வேடர்வடி வாய்ச்சென்று
வன்றொண்டர் பண்டாரங் கவரவருள் வைத்தருள,
அன்றினார் புரமெரிதா ரருளால்வேட் டுவப்படையாய்ச்
சென்றவர்தாம் வரும்வழியி லிருபாலுஞ் செயிர்த்தெழுந்து,
166
(இ-ள்) வென்றிமிகு....வைத்தருள - வெற்றி மிகுந்த சிவபூதகணங்கள் - வேடர்களின் வடிவு தாங்கிச் சென்று வன்றொண்டப் பெருமான் கொணரும் நிதியங்களைக் கவர்ந்து கொள்ளும்படி திருவருள் வைத்தருளவே; அன்றினார்....எழுந்து - பகைத் தெழுந்தவர்களுடைய திரிபுரங்களையும் எரித்த இறைவரது திருவருளினாலே (அப்பூதங்கள்) வேட்டுவப் படையாக உருவெடுத்துச் சென்று அப்பெருமான் வரும் வழியிலே இரண்டு பக்கமும் கோபித்து எழுந்து,
(வி-ரை) வென்றிமிகு பூதங்கள் - சிவபூதகணங்கள். வென்றியாவது இறைவரது அருள் வலிமை பெறுதலால் எல்லாம் வெற்றி பெறுதல். “நீடு தேவர் நிலைகளும் வேண்டிடில், நாடு மைம்பெரும் பூதமு நாட்டுவ, கோடி கோடி குறட்சிறு பூதங்கள்Ó (16)
பண்டாரம் - நிதிக்குவைகள் முதலாயின பொதிகள்.
கவர அருள் வைத்தருள - பொருள் கவர்தலே அருளாம் என்றபடி; உலகியலினும் இவ்வாறு தீச் செயலாகக் கொள்ளப்படுவனவே சிலபோது நன்மையாதலும் காணப்படும்; தன்னையோ பிறரையோ கொல்வதற்காக ஒருவன் வைத்திருந்த விடம் - வாள் முதலிய கருவிகளை அது தவிர்க்கும் பொருட்டு வேறொரு கருணையாளன் கவர்ந்து கொண்டால் அதுகளவாகாது நலமாகக் கொள்ளப்படுதல் போலக் கண்டுகொள்க.
அருள் வைத்தருளுதல் - திருவுள்ளத்ததுச் சங்கற்பித்தல் - எண்ணுதல்.
அன்றினார் - பகைவர்; அப்பூதங்கள் சென்று- என எழுவாய் வருவிக்க நின்றது; இசையெச்சம்.
வேட்டுவப்படை - படைகளையுடைய வேடர் கூட்டம்; வேடர்கள் ஆறலைத் துண்ணும் பாலைத்தினைக்குரிய செய்தியுடையவர்களைக் குறித்தவாறு,
அவர் - முன்கூறிய வன்றொண்டர் என்க. இருபாலும் - இருபுறமும்.
செயிர்த்து எழுந்து - கோபித்துக் கிளம்பி; எழுந்து - என்றதனால் முன்னர்க் காத்திருந்த என்பது பெறப்படும்.
எழுந்து - வாங்கிச் சந்தித்துக் - குத்திக் - கவர்ந்து கொள என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.