ஆரூரர் தம்பாலவ் வேடுவர்சென் றணையாதே நீரூருஞ் செஞ்சடையா ரருளினா னீங்கவவர் சேரூராந் திருமுருகன் பூண்டியினிற் சென்றெய்திப் போரூரு மழவிடையார் கோயிலைநா டிப்புக்கார். | 168 | (இ-ள்) ஆரூரர்.....நீங்க - ஆரூரரிடத்து அந்த வேடுவர்கள் சென்று சேராமல் நீரினைத் தரித்த சிவந்த சடையினையுடைய பெருமானாரது திருவருளினாலே நீங்கியிட; அவர்.....எய்தி - அவர்கள் சேர்ந்த ஊராகிய திருமுருகன்பூண்டியினிற் போய்ச் சேர்ந்து போரூரும்......புக்கார் - போரில்வல்ல இளமையுடைய இடபத்தை உடையவராகிய இறைவரது திருக்கோயிலை நாடிச் சென்று புகுந்தனர் (ஆரூரர்). (வி-ரை) ஆரூரர்.....அருளினால் நீங்க - அவ்வேடர்கள் முன்னர் வந்த பரிசனங்களை வெருட்டிப் பண்டாரங் கவர்ந்தனரே யன்றிப் பின்னர்வந்த நம்பிகள் பக்கம் வரவில்லை; நம்பிகளும் மணியாரம் பூண்வருக்கந் தாங்கியவரா யிருந்தும் அவர்பாற் சாராது நீங்கியமையாலே அவ் வேடுவர் ஆறலைத்துப் பொருள் பறித்துண்ணும் ஏனைவேடுவர் போலல்லர் என்பது கருத இடமாயிற்று என்க; பதிகத்தின் குறிப்பினும் இவ்வேடர் பறியினுக்கு இறைவரே உளவாயினர் என்பது பெறப்படுதலும், “கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை.Ó (அவிநாசி) என்று பின்னர் அருளுதலும் காண்க. அருளினால் நீங்க - இறைவரது திருவருட் குறிப்பினால் நீங்கியிட. அவர் - அவ்வேடுவர்; அவர் சேர் ஊர் - கவர்ந்த பண்டாரங்களைக் கைக்கொண்டு அவ்வழியில் திருமுருகன் பூண்டியை நோக்கி அவ் வேடுவர் சென்றமையாலும், அவ்வூரே அங்கு முதலில் இருப்பதாலும் அத் திருமுருகன் பூண்டியே அவர் சேர் ஊர் என்றார்; பதிகத்துள்ளும் “எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் கிங்கிருந்தீர்Ó என்ற குறிப்பும் காண்க. (உமது எல்லையில் கள்வர்வராமற் காக்க வில்லையே என்பது); இவ்வாறன்றி அவர் என்பது செஞ்சடையார் என்பதைச் சுட்டுவ தென்று கொண்டு, நீங்கும்படி வேடர்க்கருளிய அப்பெருமான் சேர் ஊர் என்றுரைத்தலுமாம்; இப்பொருளில் அப்போரூருமழவிடையார் என்று அங்கும் சுட்டு விரித்துரைத்துக் கொள்க. நாடிப்புக்கார்- செல்லும் வழியினில் இல்லாது, அக்கோயில், விலகி உள்ளே இருப்பதால் நாடி - என்றார்; புக்கார் - நகரினுள் புகுந்தார். கோயிலினுட் புகுதல் - மேற்பாட்டிற் கூறப்படும். |
|
|