பாடியவர் பரவுதலும் பரம்பொருளா மவரருளால் வேடுவர்தாம் பறித்தபொரு ளவையெல்லாம் விண்ணெருங்க நீடுதிரு வாயிலின்முன் குவித்திடலு நேரிறைஞ்சி ஆடுமவர் திருவருளா லப்படியே கைக்கொண்டார் | 171 | (இ-ள்) பாடி...அருளால் - முன்கூறியபடி நம்பிகள் பாடித் துதித்தலும் பரம்பொருளாகிய அவ்விறைவரது திருவருளினால்; வேடுவர்தாம்....குவித்திடலும் - வேடுவர்கள் தாம் பறித்துக் கொடுபோன பொருள்களை எல்லாம் ஆகாயம் அளாவ நீடும் திருவாயிலின் முன்னே குவித்திடவும், (அதுகண்டு); நேரிறைஞ்சி - திருமுன்பு வணங்கி; ஆடுமவர்....கைக்கொண்டார் - அருட்கூத்தாடுகின்ற இறைவரது திருவருளினாலே அவ்வாறே எடுத்துக்கொண்டனர். (வி-ரை) அருளால் வேடுவர் - குவித்திடலும் - என்க; “கவர அருள் வைத்தருளக் கவர்ந்து கொளÓ (3914) என்றதுபோல, மீளக் கொணர்ந்து குவிக்க அருள் வைக்கக் குவித்தனர் என்பதாம். அருளாற் பறித்த என்று கூட்டியுரைக்கும் குறிப்புடனும் நின்றது. விண்ணெருங்க நீடும் திருவாயில் - வானளாவ ஓங்கிய திருவாயில்; “பெரியோ ருள்ளம் போல ஓங்குநிலைத் தன்மையவாய் - அருள்செய்த ஒழுக்க மல்லாற் றீங்குநெறி யடையாத தடையு மாகிÓ (1165) என்றது காண்க. விண்ணெருங்கக் குவித்திடலும் என்று அப்பொருள்களினளவு உணர்த்தியதாக உரைக்கவும் நின்றது. ஆடுமவர் திருவருளால் அப்படியே - ஆடுதல் - அருட்கூத்தியற்றுதல்; திருவருளாவது “தாமே கொடுப்பதலால்Ó (3912) என்று முன்கூறிய கருத்தின்படி தாமே கொடுத்தருளுதல்; அப்படியே- பறியுண்ட அவ்வாறே; ஒன்றாயினும் சிதைவு குறைவு இன்றி; அப்படியே - சேரனார் கொடுத்த தென்பதன்றி இறைவர் தாமே கொடுத்தருளும் பொன்னாகவே. |
|
|