பாடல் எண் :3919

கைக்கொண்டு கொடுபோமக் கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க், கொங்ககன்று,
மெய்க்கொண்ட காதலினால் விரைந்தேகி, மென்கரும்புஞ்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்றணைந்தார்.
172
(இ-ள்) கைக்கொண்டு....ஏவி - எடுத்துக்கொண்டு போகின்ற அந்தச் சுமையாள்களைச் செல்லச் செய்து; மைக்கொண்ட,,,,போய் - விடத்தினைக்கொண்டு விளங்குகின்ற திருமிடற்றினையுடைய இறைவரை வணங்கி விடைபெற்றுச் சென்று; கொங்ககன்று - கொங்கு நாட்டினை நீங்கிப்போய்; மெய்க்கொண்ட....விரைந்தேகி - உண்மை நிலைபற்றி எழுந்த பெருவிருப்பத்தினாலே விரைந்து சென்று; மென்கரும்பும்....சென்றணைந்தார் - மென்கரும்பும் வயல்களில் நெருங்கிய செந்நெல்லும் சூழ்ந்துவிளங்கும் திருவாரூரினைச் சென்று சேர்ந்தனர்.
(வி-ரை) கைக்கொண்டு - வேடுவர் குவித்த பொருள்களை தாம் சுமை ஆள்களினால் எடுத்துக்கொண்டு.
அக் கைவினைஞர் - அச்சுமையாள்கள்; ஏவி - செல்ல விடுத்து.
கொங்கு அகன்று - கொங்கு நாட்டினை நீங்கிச் சென்று.
கொங்கு அகன்று - திருவாரூர் சென்றணைந்தார் - சென்ற நாடும்வழியும் பிறவும் முன் (3797) கூறினாராதலின் இங்குக் கூறாராயினர். கொங்குநாடு கடந்ததும் திருவாரூர் அணைந்ததும் விரைவில் உடனிகழ்ச்சிபோல நிகழ்ந்தன என்பதும் கவிநயமாகிய குறிப்பு; இவ்வாறு விரைதற்குக் காரணம் மெய்க்கொண்ட காதலினால் என்றுணர்த்தியதும் காண்க. காதலினால் வழிச்செலவு விரைந்து கழிதல் உலகியல்புமாம். மென்கரும்பும் - சாலியும் - “நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும்Ó என்பவாகலின் இவற்றை விதந்து கூறினார். மென்கரும்பு - கரும்பின் உயர்ந்த வகை - (609 பார்க்க); சாலி - செந்நெல்.