பாடல் எண் :3920

நாவலர்மன் னவரருளால் விடைகொண்ட நரபதியார்
ஆவியினொன் றாநண்பி னாரூரர் தமைநினைந்து,
மாவலரு மலர்ச்சோலை மகோதையினில் மன்னி மலைப்
பூவலயம் பொதுநீக்கி யரசுரிமை புரிந்திருந்தார்.
172
(இ-ள்) நாவலர் மன்னவர்....நரபதியார் - நாவலர் பெருமானாராகிய நம்பிகளது திருவருளால் விடைபெற்றுக்கொண்ட அரசனாராம் சேரமானார்; ஆவியின்....நினைந்து - உயிரினால் ஒன்றாகிய தன்மையுடைய நண்பினையுடைய நம்பியாரூரரை இடையறாது நினைந்துகொண்டவாறே; மாவலரும்....மன்னி - வண்டுகள் சத்தித்தற்கிடமாகிய மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த மகோதை நகரின்கண் வீற்றிருந்து; மலை....புரிந்திருந்தார் - மலைநாட்டின் அரசினைப் பிறர்க் குரித்தன்றித் தமக்கேயுரிமையாகக் கொண்டு அரசு புரிந்தமர்ந் திருந்தனர்.
(வி-ரை) நாவலர் மன்னவர் - நம்பிகள்; அவரருளால் விடைகொண்டமை முன் (3907 - 3912) உரைக்கப்பட்டது; நாவலர் - தமிழ்ப்புலமை மிக்கவர்; நாவல் நகரின் தலைவர் என்றலுமாம். நரபதி- உலகுயிர்க் காவலர் - உலக மன்னர்.
ஆவியின் ஒன்றாம் நண்பு - உடல் இரண்டாயினும் உயிரினால் ஒன்றாமென்னும் தன்மையுடைய பிரியா நட்பு; “என்புருகி யுயிரொன்றி யுடம்பு மொன்றா மெனவிசைந்தார்Ó (3812); இவர்கள், தந்தமணிமே னிகள்வேறாமெனினு மொன்றாந் தன்மையராய்Ó (4248); ஆவியின் - ஆவியின் ஒற்றுமைப்பட்ட தன்மையால்; ஆவியினால் - உயிர் உணர்வினாலே இதற்கு இவ்வாறன்றி உயிரியல்புகளுள் ஒன்றாகிய நண்பு என்றுரைத்தனர் முன்னுரைகாரர். “உணர்ச்சிதான், நட்பாங் கிழமைதரும்Ó என்றபடி வந்த நட்பு.
ஆரூரர் தமைநினைந்து - அரசுரிமை புரிந்து இருந்தார் - “பாரோடு விசும்பாட்சி யெனக்குமது பாதமலர்Ó (3966) என்றபடி அவ்வரசு அவர் தந்த ஆணைப்படி அவரதுடைமையாகவே கொண்டு அவர்மீள வருமளவும் அரசு புரிந்து, பரதன் இராமனது பாதுகையைத் தாங்கி அவன் வருமளவும் அரசு செய்தான் என்ற இராமன் கதை இங்குக் கருதற்பாலது; மேல், நம்பிகள் கயிலை செல்லும்நிலை கேட்டவுடன் அரசதிருவை விட்டுக் குதிரையேறி அவர் பாதம் சேவித்துத் தாமும் சேரும் வரலாறும் கருதுக; இக்குறிப்பு மேல்வரும் பாட்டில் ஆசிரியர் அருளுகின்றவாற்றா லறிக.
மலைப்பூவலயம் - மலைநாட்டுப் பரப்பு. பொது நீக்கி - தனக்கே உரிமையாக; “பொதுக்கடிந்துÓ (திருநா - சிறப்); “போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறான்Ó (புறம்); “பொதுநீக்கித் தனைநினையÓ (அரசு).
மா - வண்டு; அலரும் - சத்திக்கும்; பிறவினையாகக் கொண்டு அலர்த்தும் என்றலுமாம்.
மாவலரும்......மன்னிமலை - இவ்வடி முற்றுமோனை.
புரந்திருந்தார் - என்பதும் பாடம்.