இந்நிலைமை யுதியர்பிரா னெம்பிரான் வன்றொண்டர் பொன்னிவள நாடகன்று மகோதையினின் மேற்புகுந்து மன்னுதிருக் கயிலையினில் மதவரைமே லெழுந்தருள முன்னர்வயப் பரியுகைக்குந் திருத்தொழில்பின் மொழிகின்றாம். | 174 | (இ-ள்) இந்நிலைமை உதியர்பிரான் - இந்நிலைமையில் அரசு புரிந்திருக்கும் சேரமானார்; எம்பிரான்....எழுந்தருள - எமது பெருமானாராகிய வன்றொண்டப் பெருந்தகையார் சோழ வளநாட்டினை நீங்கி மகோதை நகரத்தில் இனிமேல் வருங்காலத்துப் புகுந்து நிலைபெற்ற திருக்கயிலையின்கண் யானையின்மேல் ஏறி எழுந்தருள (அப்போது); முன்னர்....மொழிகின்றாம் - அவர் முன்னே தமது கொற்றக் குதிரையினைச் செலுத்தி அவருடனே தாமும் திருக்கயிலையினைச் சாரும் திருத்தொழிலினைப் பின்னர் மொழிவோம். (வி-ரை) இது நம்பிகளைப் பிரிந்தபின், மீள அவர் போந்து அவருடனே கூடிச் சேரனாரும் கயிலைசேரும்வரை உள்ள கழறிற்றறிவாரது சரிதத்தின் பிற்பகுதியைக் குறித்ததாம்; இவ்வாறு சுருக்கிச் சுட்டிப், பின்கூறுவோம் என்று கூறிய அவ்வாற்றாலேயே அப்பகுதியினையும் கூறாததுபோலக்கூறி, இங்கு இவர் புராணம் நிறைவாக்கிய கவிநயமும் கண்டுகொள்க; இவ்வாறு கூறாவிடின் இப்புராண நிறைவாகாமல் எச்சமாய் நிற்பதாகு மியல்பும் கண்டுகொள்க. இந்நிலைமை உதியர்பிரான் - இந்நிலைமையில் அரசுபுரியும் சேரனார். இந்நிலைமையின் - (மேவும் சேரனார்) பரியுகைக்கும் திருத்தொழில் என்று கூட்டுக. மேல் வன்றொண்டர் புகுந்து கயிலையினில் எழுந்தருள - என்று கூட்டி உரைத்துக் கொள்க; மேல் - மேல் வருங்காலத்து; எழுந்தருள - எழுந்தருளும் போது, புகுந்தால் - என்ற பாடமுமுண்டு; அது சிறப்பின்று. முன்னர் - அவர்கடவும் யானையின் முன்னே; பரியுகைக்கும் திருத்தொழில் - இதனைப் பின்னர் வெள்ளானைச் சருக்கத்துட் கூறுதல் கண்டு கொள்க; பின் - வெள்ளானைச் சருக்கத்துள்; வயம் - வெற்றி; வெற்றியாவது தன்னை ஊர்ந்த தலைவருடன் தானும் கயிலை செல்வதும், சிவமந்திர முபதேசிக்கப் பெற்று வினை நீங்கி நிலைபேறு பெறுவதுமாம். இதனால் பிற்சரிதத்தின் அப்பகுதியும் குறித்தவாறு. முயல்கின்றாம் - என்பதும் பாடம். |
|
|