மலைமலிந்த திருநாட்டு மன்னவனார் மாகடல்போற் சிலைமலிந்த கொடித்தானைச் சேரலனார் கழல்போற்றி நிலைமலிந்த மணிமாட நீண்மருகு மாமறைசூழ் கலைமலிந்த புகழ்க்காழிக் கணநாதர திறமுரைப்பாம். | 175 | (இ-ள்) மலைமலிந்த....போற்றி - மலைகள் மிகுந்த செல்வமுடைய மலைநாட்டரசனாராகிய பெரிய கடல்போன்ற வில் எழுதிய கொடியினைக் கொண்ட படைகளையுடைய சேரமான் பெருமானாரது திருவடிகளைத் துதித்து அத்துணையானே); நிலைமலிந்த....திறமுரைப்பாம் - நிலையினாலுயர்ந்த அழகிய மாடங்களையுடைய நீண்ட வீதிகள் தோறும் பெரிய வேதங்களும் அவற்றினை உட்கொண்ட கலைகளும் பயின்றொழுகும் திறம் மிக்க புகழினையுடைய சீகாழியில் வாழ்ந்த கணநாத நாயனாரது திறத்தினைச் சொல்வோம். (வி-ரை) இதுகவிக்கூற்று; ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தினை முடித்துக்காட்டி இனிக் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். மலைமலிந்த திருநாட்டு - மலைகளை மிகவுடைய மலைநாட்டின். சிலைமலிந்த கொடி - விற்கொடி; சிலை - வில்; விற்கொடி சேரர் மரபுக்குரியது. சிலைமலிந்தகொடித் தானைச் சேரலனார் - ஏனை அரசர்களுடைய சேனைகளின் சேவக மெல்லாம் அவர் இவ்வுலகத்துள்ள கால அளவின் எல்லை மட்டும் அமைவன; ஆனால் இச்சேரமானாரது சேனையுள் அவர் இவ்வுலகை விட்டுக் கயிலைக்குச் செல்லும் போதும் எல்லாரும் “சுரிகையால் முறைமுறை யுடல்வீழ்த்துச் (4265)Ó “வீரயாக்கையை மேல்கொண்டு வில்லவர் பெருமானைச் சார முன் சென்று சேவக மேற்றனர்Ó (4266); இவ்வாறு சேனைசூழக்கயிலைக்குச் சென்றனர்; எனப்பின்னர் வரலாற்றினால் அறிவோம். இக்குறிப்புப்பட ஈண்டுப் புராணம் முடித்துக்காட்டும் நிலையில் தானைச் சிறப்புப்பற்றிக் கூறிய தெய்வக் கவிநலம் கண்டு கொள்க. பின்னே வரும் “பரியுகைக்கும் திருத்தொழில்Ó என்ற பகுதியை முன்பாட்டிற் குறித்த ஆசிரியர் அப்போது சேனை வீரர்கள் வீரயாக்கையுடன் தம்மைச் சேவகம் ஏற்றுச் சூழச் சென்றனர் என்ற பகுதியை ஈண்டுக்குறித்துச் சரித நிறைவாக்கிய நயமும் கண்டுகொள்க. மலைமலிந்த திருநாட்டு - “மாவீற்றிருந்த....மலைநாட்டுÓ (3748) என்று தொடங்கியதனை முடித்துக் காட்டியவாறு. மலைகளுள் எல்லாம் சிறந்த திருமலை என்னும் கயிலைத் திருநாட்டிலே என்ற குறிப்பும்பட நின்றது; திரு என்ற குறிப்புமது; இவ்வாறே முன்பாட்டில் “திருத்தொழில்Ó என்றமையால் பரியுகைத்தலுடன் திருவுலாப் பாடியருளிய குறிப்பும் பெறவைத்த நயமும் ஈண்டுக் கண்டுகொள்க. நிலைமலிந்த - நிலைபேற்றினாற் சிறந்த; நிலைபேறாவது அற முதலிய உறுதிப் பொருள்களைப் பெறுவோர் உறைதற்குச் சாதனமாயிருத்தல்; “தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம், விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவேÓ (தேவா) என்ற திருவாக்கு ஈண்டு நினைவு கூர்தற்பாலது; “நான்மறை சூழ் கலை மலிந்த புகழ்Ó என்ற குறிப்புமிது; காழிக் கணநாதர் - “கடற்காழிக் கணநா தனடியார்க்கு மடியேன்Ó - என்ற முதனூற் சொற்பொருளாட்சி போற்றப்பட்டு நினைவு கூரவைத்தருளியபடி. |
|
|