பாடல் எண் :3924

ஆய வன்பர்தா மணிமதிற் சண்பையி லமர்பெருந் திருத்தோணி
நாய னார்க்குநற் றிருப்பணி யாயின நாளுமன் பொடுசெய்து
மேய வத்திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினிலவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.
2
(இ-ள்) ஆய அன்பர் தாம் - அவ்வாறாகிய அன்பர்; அணிமதில்....செய்து - அழகிய மதில் சூழ்ந்த சீகாழிப்பதியில் விரும்பி எழுந்தருளியுள்ள திருத்தோணியப்பருக்கு நல்ல திருப்பணியாயினவற்றை நாடோறும் அன்புடனே செய்து; அத்திருத்தொண்டனில் விளங்குவார் - அத்திருத்தொண்டுபுரி நிலைமையில் சிறப்புற்று விளங்குவாராய்; விரும்பி.....பயில்விப்பார் - விருப்புடன் வந்து அணைகின்ற அன்பர்கட்குத் தூய்மையுடைய கைத்திருத்தொண்டாகிய சரியை நிலைகளில் அவர்களை அவ்வத்துறைதோறும் பயிலச் செய்வாராய்,
(வி-ரை) திருத்தோணி நாயனார் - தோணியப்பர். நல்திருப்பணியாயின....செய்து - நன்மையாவது நன்மைகளெல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மையாகிய வீடு பேற்றுக்குச் சாதனமாயிருத்தல். ஆயின - ஆக்கச்சொல் தகுதியும் பிறவும் குறித்தது; அன்பொடு - அன்பு அடிப்படையாக வன்றிச் செய்யும் பணிகள் பயனில என்பது; “ஆகுல நீர பிறÓ (குறள்).
மேய் அத்திருத்தொண்டினில் - தொண்டு - நாயனார் செய்த எல்லாத் திருப்பணிகளின் தொகுதியைக் குறித்தது. மேய - பொருந்திய.
விளங்குவார் - விளங்குவாராகி; முற்றெச்சம். விளங்குவார் - பயில்விப்பார் - ஆக்கி - மிக்கார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
விரும்பி வந்தணைவார்க்கு - அத்திருப்பணிகளைச் செய்ய விரும்பித் தம்மிடம் வந்து அணையும் அன்பர்களுக்கு. தம்மை விரும்பி வந்தடைந்தவர்கட்கு என்றலுமாம்.
தூய கைத் திருத்தொண்டு - தூய - தூய்மைப்படுத்துந் தன்மையுடைய; கைத் திருத்தொண்டு - சரியைப் பகுதிகள். இவை மேல்வரும் பாட்டில் விரிக்கப்படுவன; சுத்த சைவத்துக்கு உயிராவது சரியை என்றருளினர் திருமூலதேவர். “சுத்த சைவத்துக் குயிரதேÓ (திருமந் - 5 தந்); சைவத் திருத்தொண்டில் நிற்பவர்களேமேல் கிரியா யோகங்களையும் முறையே ஞானத்தினையும் பெற்று வீடு பெறுவார்களாதலின் அவ்வாறு பெறுதற்குரிய தூய்மையையும் தகுதியையும், முதற்கண் தருவது கைத்தொண்டேயாம் என்பது.
துறைதொறும் - சரியையின் துறைகள் பலவற்றிலும்; அவை மேல்வரும் பாட்டிற் காணப்படும்; அவ்வவர் பக்குவ பேதம் நோக்கி, வெவ்வேறு தக்க துறைகள் வேண்டப்படுவன.
பயில்விப்பார் - பயிற்றுவார் (3926).