நல்ல நந்தன வனப்பணி செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர் பல்மலர்த்தெடைபுனைபவர், கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர், அல்லு நண்பக லுந்திரு வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள் எல்லை யில்விளக் கெரிப்பவர், திருமுறை யெழுதுவோர் வாசிப்போர், | 3 | (இ-ள்) வெளிப்படை; நல்ல திருநந்தனவனத்தின் பணி செய்வோரும், நறிய துணர்களில் பூத்த மலர்களைக் கொய்வோர்களும், பலவகைப்பட்ட மலர் மாலைகளைப் புனைபவர்களும், சென்று திருமஞ்சன நீரினைக் கொணரும் பணிக்கு உள்ளவர்களும், இரவும் பகலுமாகத் திருவலகும் திருமெழுக்கும் அமைப்போர்களும், அளவு படாத திருவிளக்கு எரிப்பவர்களும், திருமுறைகளை எழுதுவோர்களும், அவற்றை வாசிப்பவர்களும். (வி-ரை) நல்ல...பணி செய்பவர் - நல்ல - நன்மையாவது இறைவரை அலங்கரிக்க வாய்த்த புனிதமாகிய செடி மரம் கொடிகளை வளர்த்தலும் காத்தலும் சிவன்பணிக்குப் பயன்படுத்தலும் ஆகிய இவை தீமை கலவாத, கருணையே உருவுடைய, பணி என்னும் தன்மை; செய்பவர் - நிலம் பண்படுத்தல், விதை - நாற்று முதலியவை நடுதல், நீர்பாய்ச்சுதல். களை கட்டல் முதலாயினவை செய்தல் எனப்பட்டன. பின்னர், அவ்வப்பணிகளின் தொழில்வகைக் கேற்றபடி மலர் கொய்வோர் - தொடைபுனைபவர் - மஞ்சனப் பணிக்கு உள்ளோர் - அமைப்போர்கள் - எழுதுவோர் - வாசிப்போர் என்பது காண்க. நறுந்துணர் மலர் - மணமுடைய துணர்களில் கொய்யத்தக்க மலர்களை என்க. துணர் - கொத்து; துணர்களில் அன்றலர்ந்தவையாய், காயரும்புகளும் முன் அலர்ந்தவையும், அல்லாதவையாய்க், குற்றமற்ற மலர்களே தெரிந்து கொய்யத் தக்கன என்பது; “கையினிற் றெரிந்து நல்ல கமழ்முகை யலரும் வேலைÓ (559). மலர்கள் அலரும் பருவத்தே மணமுடையவாம் என்பதும் பெறவைத்தார். தொடை - மாலை, கண்ணி, கோதை முதலிய பலவகையாலும் தொடுக்கப்படுவன. பற்பலவாறு புனையப்படுதலின் புனைபவர் என்றார். கொணர் திருமஞ்சனப் பணிக்குள்ளோர் - வேறிடத்துள்ள புனித நீர்நிலைகளினின்றும் எடுத்துக் கொணர வேண்டியிருத்தலின் கொணர் என்றார். பணிக்கு உள்ளோர் - இப்பணி செய்வோர் தூய்மையு மரபும் முதலிய தகுதியுள்ளோர்களேயாதல் வேண்டும் என்பது குறிப்பு. அல்லும்.....அமைப்போர்கள் - ஓரிடமும் விடாது உடல் முயற்சியினால் ஒழுங்குபட அமைக்கப்படல் வேண்டுவன திருவலகும் திருமெழுக்குமாம் என்பது; பலபேரும் வழிபடும் நிலைகளாதலின் இவை அல்லும் நண்பகலும் விடாது செய்யப்படுதல் வேண்டும் என்பதுமாம். அல் - இரவு. நண்பகல் - உச்சிவேளை. இவை வழிபாட்டு நேரங்களல்லாமையும் குறிக்க; காலை மாலைகளில் வந்து வழிபடுவோர்க் கிடையூறின்றி முன் எச்சரிக்கையாய்ச் செய்யத்தக்கன என இவை செய்தற்குரிய காலக் குறிப்பும் காரணக் குறிப்பும்படக் கூறிய நயம் கண்டுகொள்க. “அந்தியும் பகலுந் தொண்ட ரலகிடும்Ó (திருவிளை - புரா). எல்லையில் விளக்கு - திருவிளக்குக்கள் எப்போதும் இடப் பெறுதலின் எல்லையில் என்றார்; எண்ணிக்கையாலும் அளவு படாமையும் குறிப்பு. திருமுறை எழுதுவோர் - வாசிப்போர் திருமுறை - தேவாரத் திருமுறைகளும், திருமந்திரமும், அம்மையார் அருநூல்களும், இவ்வகைப்பட்ட பிறவுமாம். வேறு நூல்களுக்கு இப்பெயர் வழங்குதல் பெரும் பிழையும் பாவமுமாகும். இவற்றை எழுதிக் கொடுத்தலும் பெரும் சரியைப் பணியாயிற்று; முன்னாள் எழுதி வழங்குதலே வழக்காதல் காண்க. முன்னாளில் திருமுறைகள் முதலாகிய நூல்களையும், புராணம் இலக்கிய இலக்கணங்கள் முதலியவற்றையும் எழுதிக்கொடுத்து, அதனால் சீவனம் செய்தலும் வழக்கு; இந்நாளில் அச்சுப் புத்தகங்கள் எளிதிற் பெறக்கூடியவையாதலின் இந்நாள் மக்கள் எழுதும் பணியின் இடத்தில் அச்சுப் புத்தகங்களையாக்குதலும் அவற்றை வாங்கிக் கொடுத்தலுமாகிய பணியைச் செய்யலாம். வாசிப்போர் - திருமுறைகளை வாசிக்கப் பயிற்சி செய்தலும் சிவபுண்ணியமாகிய சரியை நிலையிற் பேசப்பெற்றது. தேவாரப் பள்ளிக்கூடங்கள், சிவ ஆகமபாடசாலைகள் முதலியவை இவற்றுள் அடங்கும். வாசிக்கப் பயிற்சி பெறாதவர்கள் திருமுறைகளாகிய இந்நூல்களை வாசித்தால் பிழைபட்டுப் பயனில்லாமையுடன் சிவஅபசாரப்பட்டு நரகத்துக்கும் உட்படுவர். திருமுறை எழுதுவோர் - வாசிப்போர் - இவர்களைப் பயிற்றுதலும், அவ்வவர்க்கு அத்தொண்டின் வினைவிளங்கிட வேண்டிய குறையெல்லாம் முடித்தலும், இவ்வாறு தொண்டரை ஆக்கலும் சிவன் சரியைப் பணியும் பூசையுமாம்; “ஞானநூ றனையோத லோதுவித்த னற்பொருளைக் கேட்பித்த றான்கேட்ட னன்றா, வீனமிலாப் பொருளதனைச் சிந்தித்த லைந்து மிறைவனடி யடைவிக்கு மெழின்ஞான பூசைÓ (சித்தி - 8. சூத்). கொய்வோரும் புனைவோரும் - என உம்மைகள் விரிக்க. |
|
|