இனைய பஃறிருப் பணிகளி லணைந்தவர்க் கேற்றவத் திருத்தொண்டின் வினைவி ளங்கிட வேண்டிய குறையெலா முடித்துமே விடச்செய்தே, அனைய வத்திறம் புரிதலிற் றொண்டரை யாக்கியன் புறுவாய்மை மனைய றம்புரிந், தடியவர்க் கின்புற வழிபடுந் தொழின்மிக்கார். | 4 | (இ-ள்) இனைய.....பல் திருப்பணிகளில் - இவ்வாறாகிய பற்பல திருப்பணிகளிலே; அணைந்தவர்க்கு......விளங்கிட - வேண்டி வந்து அணைந்த அன்பர்களுக்கு அவரவர்க்கேற்ற அவ்வத் திருத்தொண்டின் செயல்கள் விளங்கும்படியாக; வேண்டிய.....செய்தே - அவர் வேண்டிய குறைகளை யெல்லாம் அறுத்து நிறைவாக்கி முடித்துப் பொருந்தும்படி செய்தே; அனைய.....ஆக்கி - அவ்வாறாகிய அத்திறங்களைச் செய்தமையாலே தொண்டர்களைப் பெருகும்படி உளராக்கி; அன்புறுவாய்மை மனையறம் புரிந்து - அன்பு பொருந்திய வாய்மையினையுடைய இல்லறத்தினை நடத்தி வாழ்ந்து; அடியவர்க்கு.......மிக்கார் - சிவனடியார்களுக்கு இன்பம் பொருந்தும்படி வழிபடுகின்ற தொழிலிற் சிறந்து விளங்கினார். (வி-ரை) இனைய - முன்பாட்டிற் கூறியவர்களும் இவ்வகைப்பட்ட; பஃறிரு - பல் திரு. அணைந்தவர்க்கு - தம்பால் வேண்டி வந்தவர்களுக்கு; பணிகளிற் புக்கு உள்ளவர்க்கு என்றலுமாம். பக்குவம்வரத் திருவருள் அனையப் பெற்றோர்க்கு என்ற குறிப்புமாம். “அணைவுற வந்தெழு மறிவு தொடங்கிய அடியார்பால்Ó (1981). வினை விளங்கிட - அவ்வத் தொழில்களிற் சிறப்புப் பெற; வேண்டிய குறை எலாம் முடித்து - குறை - அவ்வத்தொழில் செய்தற்கண் வரும் சாதனங்கள், கருவிகள் முதலியவற்றின் முட்டுப்பாடும், அவ்வவர்க்கு வரும் உணவு உறையுள் உடை முதலியவற்றின் முட்டுப்பாடும், பிறவுமாகிய குறைகள் எவையுமில்லாமற்செய்து. மேவிட - அவ்வத் தொழில்களிற் பொருந்தியிட. தொண்டரை ஆக்கி - ஆக்குதல் - பயிற்சி முதலிய உதவிகளினால் உள்ளாரரகச் செய்தல்; “அறிவளித் தவர்திற மவனியின் மிசையாக்கும்Ó (3928) மனையறம் புரிந்து - தொண்டரை ஆக்குதற்கும், அடியவர்களை அமுதூட்டி வழிபடுதற்கும் இல்லற வாழ்வு இன்றியமையாததாகும் என்பது. இல்லறத்திற்கு அன்பு, சிறந்ததோர் உறுப்பாதலின் “அன்புறு வாய்மை மனையறம்Ó என்றார். “அன்புமறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மதுÓ (குறள்); வாய்மை - “பொய்கடிந் தறத்தின் வாழ்வார்Ó (341) என்றது காண்க; உறு - பொருந்திய. மிக்கார் - மிகுதியாவது சிறந்து விளங்குதல். |
|
|