பாடல் எண் :3927

இப்பெ ருஞ்சிறப் பெய்திய தொண்டர்தா மேறுசீர் வளர்காழி
மெய்ப்பெ ருந்திரு ஞானபோ னகர்கழன் மேவிய விருப்பாலே

முப்பெ ரும்பொழு தருச்சனை வழிபாடு மூளுமன் பொடுநாளும்
ஒப்பில் காதல்கூ ருளங்களி சிறந்திட வொழுகினார் வழுவாமல்.
5
(இ-ள்) இப்பெரும்....தொண்டர் தாம் - இவ்வாறாகிய பெருஞ் சிறப்பினைப் பெற்ற திருத்தொண்டர்; ஏறுசீர்....விருப்பாலே - அடியவர்களது உள்ளங்களிலெல்லாம் எப்பொழுதும் ஏறும் சிறப்பு வளர்கின்ற சீகாழியில் வந்தருளிய மெய்ப்பெருந் திருஞான முண்டருளியவராகிய பிள்ளையாரது திருவடியைப் பொருந்திய விருப்பினாலே; முப்பெரும்....சிறந்திட - ஒவ்வொரு நாளிலும் மூன்று பெரும் பொழுதுகளிலும் அருச்சனை வழிபாட்டினைப் பெருகும் அன்புடன் ஒப்பற்ற காதல் மிகுவதாகிய மனத்தில் மகிழ்ச்சி மேலோங்கும்படி செய்து; வழுவாமல் ஒழுகினார் - வழுவாது ஒழுகி வந்தனர்.
(வி-ரை) ஏறுசீர் வளர் - ஏறுதல் - மெய்த்தொண்டரது உள்ளந்தோறும் எப்போதும் ஏறப்பெற்ற சிறப்பினால் மிகுகின்ற; “ஏறுமயி லேறிÓ (திருப்புகழ்)
திருஞான போனகர் - ஆளுடைய பிள்ளையார்; போனகம் - அமுது; போனகர்; அமுதுண்டவர்.
நாளும் முப்பெரும்பொழுது - என்க; காலை நண்பால் மாலை என்பன; “அந்தியு நண்பகலும்Ó “முட்டாத முச்சந்தி மூவாயிரவர்க்குÓ “சந்தி மூன்றிலும் தாபர நிறுத்திச் சகளிசெய் திறைஞ்சுÓ (நம்பி - தேவா); பெருமையாவது சிறப்பு; தமிழ்ப் பொருளிலக்கணத்துள் வரும் பெரும்பொழுது சிறுபொழுது என்ற பகுப்பு வேறு; இங்குக் கூறிய முப்பெரும்பொழுது வேறு; காலை நண்பகல் மாலை என்ற சிறு பொழுதுகளில் வைத்து அறியலாம். “முப்பொழுது குறைமுடித்துÓ (எழுகூற்) மூளும் - மிகுதியாகிய.
களிசிறத்தல் - ஒரு சொல்; மிக மகிழ்தல்.