பாடல் எண் :3928

ஆன தொண்டினி லமர்ந்தபே ரன்பரு மகலிடத் தினிலென்றும்
ஞான முண்டவர் புண்டரீ கக்கழ லருச்சனை நலம்பெற்றுத்
தூந றுங்கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி
மான நற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டி னலம்பெற்றார்.
6
(இ-ள்) ஆன...அன்பரும் - ஆயின முன்கூறிய திருத்தொண்டில் விரும்பியிருந்த பேரன்பராகிய கணநாதரும்; அகலிடத்து...பெற்று - பரந்த நிலவுலகத்தில் எந்நாளும் திருஞானசம்பந்தரது தாமரை போன்ற திருவடியினை வழிபடுதலாகிய நன்மையினை அடைந்து அதன் பயனாக; தூ....எய்தி - தூயமணமுடைய கொன்றை மலர்களை அணிந்த முடியவரது ஒளியுடைய நீண்ட திருக்கயிலைப் பெருமலையினை அடைந்து; மான....நிலைபெற்றோர் பெருமையுடைய நல்ல பெருஞ் சிவகணங்களுக்கு நாதராகும் வழி வழி வரும் திருத்தொண்டிலே நிலைபெற்று நின்றருளினர்.
(வி-ரை) ஆன தொண்டினில் - ஆன - முன் கூறியவாறாயின; ஆன - ஆக்கமுடைய.
அமர்ந்த - விரும்பிச் செய்திருந்த.
அருச்சனை நலம் பெற்று - அருச்சனையால் வரும் பயனை யடைந்ததனால் அதன் பயனாக; பெற்று (அதனால்) எய்தி - நிலைபெற்றார் என்று காரணம் காரியப்பொருள்பட உரைத்துக்கொள்க. தொண்டரை ஆக்கினர்; அதன் பயனால் அடியவர்களை வழிபட்டனர்; அதன் பயனால் ஆளுடைய பிள்ளையாரது திருவடி வழிபாட்டினை யடைந்தனர்; அதன் பயனாக இறைவரது உலகினை எய்திக் கணநாதராகித் திருத்தொண்டின் நிலைபெற்றனர் என்றிவ்வாறு காரண காரிய முறையிற் கண்டுகொள்க. சரியை நிலையினாற் சங்கம வழிபாடும், அதனால் குருவழிபாடும், அதன்மூலம் இறைவனை யடைதலும் வருவன என்ற ஞானநூல் உண்மைகளையும் ஈண்டு வைத்துக் கண்டு கொள்க.
சுடர் - ஞானவொளி; “பொன்னின் வெண்டிருநீறு புனைந்தெனÓவெள்ளிய ஒளிவீசுதல்.
மானம் - பெருமை; நன்மை - சிவச்சார்பு; பெருமை - பெருவலிமை (16). வழித்தொண்டு - முற்செய் தவத்தின்வழி முன்கூறியபடி தொடர்புண்டுவரும் திருத்தொண்டு.
நிலைபெறுதல் - மீளாத நிலையடைதல்.