பாடல் எண் :3930

துன்னார் முனைக டோள்வலியால் வென்று சூலப் படையார்தம்
நன்னா மந்தந் திருநாவி னாளு நவிலு நலமிக்கார்
பன்னா ளீச ரடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநற் றிருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.
1
(இ-ள்) களந்தை முதல்வனார் - களந்தை முதல்வராகிய கூற்றுவனார்; துன்னார்...வென்று - பகைவர்கள் எதிர்த்து நின்ற போர்களில் தமது தோளின் வல்லமையாலே வெற்றிகொண்டு; சூலப்படையார்தம்...நலமிக்கார் - சூலப்படையினை ஏந்திய சிவபெருமானது நல்ல திருநாமத்தினைத் தமது நாவினாலே நாடோறும் சொல்லும் நன்மையில் மிகுந்தவர்; பன்னாள்....முயன்றார் - பலநாள்கள் இறைவரது அடியார்களுடைய பாதங்களைப் பணிந்து துதித்து முதன்மையாகிய நல்ல திருத்தொண்டிலே முயன்றனர்.
(வி-ரை) துன்னார் - பகைவர்; துன்னுதல் - சேர்தல்; “நோனார்Ó - சேராதவர்; (தொல். பொ. புற - 17). இந்நாயனார் குறுநில மன்னர் மரபு என்ப.
முனைகள் - போர்களை; நலம்மிக்கார் - சிறப்பால் மேம்பட்டார்.
சூலப்படையார் - சிவபெருமான்; நன்னாமம் - நன்மைதரும் சிவநாமம்; “அரன், நல்ல நாம நவிற்றியுய்ந் தேனன்றேÓ (அரசு. நீலக்குடி). நன்மையாவது வீடுபேறு.
திருநாவில் - சிவனது நல்ல நாமநவிலப் பெறும் பேறுபற்றித் திருநா என்றார். “திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்Ó (அரசு - பாதிரிப்புலியூர்.).
நாளும் - எப்போதும். நல்நாமம் - திருவைந்தெழுத்து; பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் நல்நாமம் என்றார்; “வாயின் வைக்குமளவின் மருந்தாகி.Ó
அடியார் பாதம் பணிந்தேத்தி - அடியார்களை வணங்கி வழிபட்டு அமுதூட்டுதல் முதலாயின செய்து.
முன்னாகிய நற்றிருத் தொண்டு - முன்னாதல் - முதன்மை பெறுதல்; திருத்தொண்டு - அரன்பணியும் அடியார் பணியும்.
முயன்றார் - முயன்று செய்தனர்; முயற்சியாவது இடைவிடாது நினைந்து செய்தல்.
களந்தை - பதியின் பெயர்; “களப்பாளன் - என்பது வகைநூல்; தலவிசேடம் பார்க்க.
முதல்வனார் - முதன்மையாவது ஆட்சிபுரியுந் தன்மை.