மல்லன் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத் தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட வவருஞ் “செம்பியர்தந் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோ முடிÓயென்று நல்கா ராகிச் சேரலன்றன் மலைநா டணைய நண்ணுவார், | 4 | (இ-ள்) மல்லல்....ஞாலம் புரக்கின்றார் - செழுமையுடைய நிலவுலகத்தைக் காக்கின்றாராய்; மணி.....வேண்ட - நவமணிகளையுடைய பெரிய மகுடத்தைச் சூட்டுதற்காகத் தில்லைவாழந்தணர்களை வேண்ட; அவரும்.....நல்காராகி - அவர்களும் சோழர்களது தொன்றுதொட்டு வரும் குல முதல்வர்களுக் கல்லாமல் பிறருக்கு முடிசூட்ட மாட்டோம் என்று முடியினைச் சூட்டாராகி; சேரலன்றன்.....நண்ணுவார் - சேரமன்னரது மலைநாட்டினைச் சேர நண்ணுவார்களாகி; (வி-ரை) புரக்கின்றார் - வேண்ட என்று கூட்டுக; உலகத்தை அரசாள்பவர் அதன்பொருட்டு முடிபுனைய வேண்ட; அதன் பொருட்டு என்பது குறிப்பெச்சம். தில்லைவாழந்தணர் தம்மை வேண்ட - சோழ மன்னர்களது நவமணி முடியானது தில்லையில் பேரம்பலப் பண்டாரத்தில் சேமமாக அம்பலவாணரது அருட்காவலில் தில்லைவாழந்தணர்கள் வசமாக வைக்கப்பட்டிருந்ததென்றும், அவ்வரசர் முடிசூட்டிக்கொள்ளுங் காலத்தில் அவர்கள்பால் வைத்து முடிசூட்டப் பெற்று முடிசூட்டு விழாச் செய்தபின் அங்கே மீண்டும் கொணர்ந்து அவர் காவலாக வைக்கப்படுமென்றும், இவ்வாறு மற்றும் பலவகையாலும் தில்லைவாழந்தணர்களுக்கும் சோழ மன்னர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததென்றும் நாட்டு நடப்புச் சரித வரலாறுகளாலும் கல்வெட்டு ஆதரவுகாலும் அறிகின்றோம். திருவாதவூரடிகள் புத்தரைவாது வென்ற சபைக்குச் சோழமன்னனும் வந்திருந்தான் என்ற வரலாறும் காண்க. சோழமன்னர்கள் முடிசூடிக் கொள்ளும் மரபுடைய பதிகள் ஐந்து என்பது சண்டீச நாயனார் புராணத்துட் காணப்படும்; அவை காவிரிப்பூம் பட்டினம், திருவாரூர், உறையூர், கரூர், சேய்ஞலூர் என்பன. வேண்ட - மணி மகுடத்தினை முடிசூட்டு விழாவிற்காகக் கொணர்ந்து சூட்டும்படி வேண்ட. சூரிய மரபின் இரண்யவர்மன் முதலியோர் தில்லையில் முடிசூடியதும் காண்க. நல்காராகி - இவர்கள் கொடுக்கப்பெற்றுக் கொண்டு சென்று முன்குறித்த ஐந்து ஊர்களில் ஒன்றில் முடிசூட்டிக் கொள்ளக் கொடாதவராய் என்க. முடியைக் காவல் பேணும்படி (3934) என்றதனால் அது அவர்களது வசமாய் அவர் காவலில் திருவம்பலத்தினுள் இருப்பது வழக்கு என்பது பெறப்படும். இதற்கு இவ்வாறன்றிச் சூட்டார்களாகி என்றுரைப்பாருமுண்டு. தில்லைத் திருவம்பலத்தின் சோழமன்னர்களுடைய தொடர்பு சிற்றம்பலம், பேரம்பலம், தில்லைஎல்லைகளிலும், பல வேறிடங்களிலும் சோழர்கள் பொன் வேய்ந்தமையும், பின்னாளில் அந்நியர் படையெடுப்பின்போது அம்பலக் கூத்தப்பெருமான் திருவாரூரில் எழுந்தருளியிருந்தமையும், பிறவுமாகிய வரலாறுகளால் அறியப்படும்; அவ்வாறே சோழகுல முதலோர்களின் அரசாட்சி நிலைபெற்று நேர்பெற நடத்தற்குரியவற்றைச் செய்வது தில்லைவாழந்தணர்களின் பொறுப்பாயு மிருந்ததென்பது “உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும், பெருமையார்Ó (கோயில்) என்ற நம்பிகளது திருவாக்கானும், பிறவாற்றானும் அறியப்படும். தொல்லைநீடும் - பழமையாற் சிறந்த. சோழர் குலமுதலோராகிப் பேரம்பலமுந் தில்லையெல்லையும் பொன்னின்மயமாக்கிய அநபாயச் சோழர்பால் அமைச்சுரிமை பூண்ட ஆசிரியர் பெருமான், இவ்வரச மரபு வழக்குக்களை யெல்லாம் நன்குணர்ந்தவராதலின், அதனை ஈண்டுச் “செம்பியர்தம்....சூட்டோம் முடி என்று நல்காராகிÓ என்று பொறித்துவைத்தருளினர். சூட்டோம் - சூட்டஉடன் பாடுகொடோம் என்ற பொருளில் நின்றது. சேரலன்....நண்ணுவார் - அரசாள்பவரது கருத்துக்கு மாறுபட்டாராதலின் அங்கிருக்க அஞ்சிச் சேரர் நாடு அணைந்தனர். சேரர் இவரது ஆட்சிக்குட்படாத முடிமன்னர் என்பதும் இதனாற் பெறப்படும். நண்ணுவார் - இருத்தி - எய்தியபின் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. |
|
|