ஒருமை யுரிமைத் தில்லையந் தணர்க டம்மி லொருகுடியைப் பெருமை முடியை யருமைபுரி காவல் பேணும் படியிருத்தி இருமை மரபுந் தூயவர்தாஞ் சேரர் நாட்டி லெய்தியபின், வருமை யுறவான் மனந்தளர்ந்து மன்று ளாடுங் கழல்பணிவார், | 5 | (இ-ள்) ஒருமை...இருத்தி - ஒருமையுடைய உரிமை பூண்ட தில்லைவாழந்தணர்கள் தங்களுக்குள் ஒரு குடியினைப் பெருமை கொண்ட அந்த மணிமகுடத்தினை அருமையாகக் காவல் புரியும்படி தங்கி இருக்கும்படி வைத்து; இருமை...எய்தியபின் - இருமரபுந் தூயவர்களாகிய அவர்கள் சேரர் நாட்டிற் சேர்ந்த பின்பு; வரும்....தளர்ந்து - வரும் ஐயப்பாட்டினாலே மனம் தளர்ச்சியடைந்து; மன்றுள்....பணிவார் - (கூற்றுவனார்) தில்லையம்பலத்தில் ஆடல் புரிகின்ற திருவடியைப் பணிவாராய், (வி-ரை) ஒருமை உரிமை - ஒருமையாவது ஒரே நற்சார்பிற் செல்லும் ஒழுக்கம்; உரிமையாவது முடியைப் பேணிச் சூட்டி வழிவழி காக்கும் உரிமை. சோழர் ஒரு மரபுக்கே முடிசூட்டும் உரிமை என்பது மொன்று. ஒரு குடியை....இருத்தி - அம்பலவாணர் பூசைக்கும் திருவாபரணங்களின் காவலுக்கும் ஒருகுடி இங்கு இருத்தல் வேண்டுமாதலின் அதனோடு இந்த மணிமுடியினையும் காவல் புரியும்படி வைத்துச் சென்றனர் என்க. அருமை புரிகாவல் - அரிதாகிய காப்பு; அருமையாவது அதன் தகுதிக்கேற்றபடி வல்லவாறு எல்லாம் இயற்றுதல். இருமை மரபும் தூயவர் - “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடிÓ (திருமுருகு); இருமைமரபு - தந்தைவழி தாய்வழி யிரண்டும். வரும் ஐயறவு - முடிசூடுதற்கு எண்ணியபடி கிடைக்கப் பெறாதபடியால், வேறு என் செய்வது என்று தோன்றாதநிலை ஐயுறவு எனப்பட்டது; முடிசூடுதலை விடுதலோ? அன்றி அதற்கு வேறுவழி தேடுதலோ? இன்னது செய்வது என்று தோன்றாதநிலை. மன்றுளாடுங் கழல் பணிவார் - தில்லைவாழந்தணர்கள்பால் அந்த மணிமுடியிருத்தலானும், அவர்களே அது சூட்டுவித்தற்குரிமையுடையா ராதலானும், அவருள் தாமும் ஒருவராய் உடையவராய் முதல்வராயுள்ள அம்பலவர் கழல் பணிவாராகி முடிசூடப் பெறவேண்டி வேண்டினார் (3935) என்க. தில்லைவாழந்தணர் புராணத்துள் முதலில் அம்பலவர் துதிசெய்தமைபற்றி உரைத்தவை ஈண்டு நினைவு கூர்தற்பாலன. பணிவார் - முற்றெச்சம். பணிவார் - துயில்வோர்க்கு எனவரும் பாட்டுடன் முடிக்க. பணிந்தார் - என்பதும் பாடம். |
|
|