தேனுங் குழலும் பிழைத்ததிரு மொழியாள் புலவி தீர்க்கமதி தானும் பணியும் பகைதீர்க்குஞ் சடையார் தூது தருந்திருநாட் கூனுங் குருடுந் தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம் யானும் பரவித் தீர்க்கின்றே னேழு பிறப்பின் முடங்குகூன். | 9 | (இ-ள்) தேனும்.....தீர்க்க - தேனும் புல்லாங்குழலும் என்றிவற்றினை வென்ற இனிமையுடைய திருமொழியினையுடைய பரவையாரது ஊடலைத் தீர்க்கும் பொருட்டு; மதி.......தூதுதரும் திருநாள் - மதியும் பாம்பும் பகை தீர்க்க வைத்தற் கிடமாகிய சடையினையுடைய பெருமான் தூது தந்த திருநாளிலே; கூனும்......மலர்ப்பாதம் - கூனனது கூனையும் குருடனது குருட்டுத் தன்மையினையும் தீர்த்துப் பணி கொள்வாராகிய நம்பியாரூரது விளக்கமிக்க மலர்போன்ற பாதங்களை; யானும்.....கூன் - யானும் துதித்து ஏழுவகைப் பிறப்பினும் உட்பட்டு முடங்கிக்கிடக்கும் தன்மையாகிய கூன்தன்மையினையும், அவற்றினுட் செலுத்தும் அறியாமையாகிய குருட்டுத் தன்மையினையும் தீர்த்துக் கொள்கின்றேன். (வி-ரை) தேனும்....மொழி - “குழலினிது யாழினி தென்பÓ (குறள்) என்றவாறு மொழியின் இனிமைக்கு ஓசையால் இனிய குழலும், சுவையால் இனிய தேனும் உவமையாயின; மொழியாள் - பரவையார்; மொழியாளுடைய என ஆறனுருபு விரிக்க. பிழைத்த - வென்ற என்ற பொருளில் வந்தது. புலவி தீர்க்கச் சடையார் தூதுதரும் திருநாள் - இவ்வரலாறு முன்னர் 3467 - 3528) உரைக்கப்பட்டது. மொழியாள் - சங்கிலியார் என்று கொண்டு அவர் காரணமாக வந்த புலவி என்றலுமாம். திரு - சிறந்த. மதி....சடையார் - பகை (புலவி) தீர்த்தலே இவரது தொழிலாதலின் புலவி தீர்த்தற்குரியார் என்பது குறிப்பு. பணி - பாம்பு. தூது தரும் - தூது செல்லுதனால் புலவி தீர்க்கும் தன்மையினைத் தந்த; தருதல் - ஈண்டு விளைத்தல் என்க. திருநாள் - “திருவாரூர் ஒரு வீதியிலே சிவலோக முழுதுங் காண வுளதாம்Ó படி திருஉலாப் போந்து நடந்தமையால் அது திருவிழாச் சிறப்புடைய நாளாயிற்று என்பது. கூறும்...கொள்வார் - இது இறைவர் தூது சென்றருளிய நாளில் நிகழ்ந்ததோர் அருட்செயல். இவ்வரலாறும் காரணமும், முன் வகைநூலுள் வகுக்கப்பட்டன; அது நிகழ்ந்த நாளும், பிறவும் ஈண்டு விரிநூலுள் விரிக்கப்பட்டன; அஃதாவது இரண்டாம் முறை தூதுசென்று மீண்டு, இறைவர் “தாழ்குழல் செற்றம் தணிவித்தோம்; நம்பி யினிப் போய் மற்றவ டன்பா னணுகொன்னÓ (3526) என்று அருளியபின், தேவாசிரிய மண்டபத்தினின்றும் நம்பிகள் பரவையாரது திருமாளிகையில் எழுந்தருளினர். அப்பொழுது, முன் துயிலுணர்ந்த பரிசனங்கள் அங்கங்கு நின்றும் வந்து மருங்கு மொய்த்தனர்; மாலை, தண்சாந்து, முதலியவற்றை ஏந்திப் பரிசனங்கள் செல்ல வேண்டிநின்றபோது அங்குக் குழுமிய பரிசனங்களுள் ஒரு கூனனும் குருடனும் ஏவப்பெற்றனர். அவ்விருவரும் தத்தமது உடற்குறையினாற் ஏந்திச் செல்ல மாட்டாமையை விண்ணப்பிக்க, நம்பிகளது அருளினால் முறையே கூனும் குருடும் தீர்க்கப்பெற்று ஏவல் கொள்ளப்பெற்று உய்ந்தனர் என்பதாம். (3526 - 3530 - 3531 பார்க்க) திருக்கோயிலின் மருங்கிலும், மண்டபங்களிலும், கூன் குருடு முதலிய உடற் குறைபாடுடையோர் தங்கி, ஐயமேற்றுண்டு வாழும் வழக்கு இன்றும் உண்டாதலும் இங்கு நினைவுகூர்தற்பாலது. இவ்வாறன்றி, இவ்வரலாற்றைப் பரவையார் திருமாளிகையில் கூனன் ஒருவனும் குருடன் ஒருவனும் இருந்தனர் என்றும், அவர்கள் நம்பிகளுக்கு மாலையும் அடைக்காயும் கொடுத்து வந்தனர் என்றும், அவர்கள், புலவி தீர்க்க இறைவர் தூதுசென்ற அந்நாளில் கூனும் குருடும் நம்பிகளால் தீர்த்தருளப் பெற்றனர் என்றும் உரைத்தனர் முன் உரைகாரர்கள். பரவையாரது திருமாளிகையில் மாலை சாந்து அடைக்காயமுது முதலியவற்றை வனிதையவர்கள் சேரனாருக்கும் நம்பிகளுக்கும் ஏந்தினார் (3824) என்பதறியப்படும். அன்றியும் கூனனும் குருடனுமாக நம்பிகளுக்கு மாலை அடைக்காய் தந்துவரப் பரவையாரது திருமாளிகையின் அமைப்பு நிகழ்ந்தது என்பதும் பொருந்தாதாம். தூதுதரும் திருநாள் வரைக்கும் அவர்களது குறைகளை நீக்க நம்பிகள் அருளி ஏவல் கொள்ளாமைக்கும் காரணமும் புலப்படவில்லை; திருநாட், கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் என்றதனால் அன்றே அவர்கள் ஏவல் கொள்ளப்பட்டார் என்பதும் கருதவரும். கூனும் குருடும் தீர்த்து - இதற்கு, மேற்கூறியவா றன்றி, வழிதெரிந்து, நடக்க உதவியதாக இறைவர் தந்தருளிய ஊன்றுகோல் பிடித்தனாலாகிய கூனும், திருவொற்றியூரில் வந்த குருடும் ஆகிய இவற்றை முறையே திருக்கச்சியேகம்பத்திலும் திருவாரூரிலும் நீங்கப் பெற்று என்றும், ஏவல்கொள்வார் - மலர்ப்பாதம் தாமே வலிந்தாட்கொள்ளப் பெற்றவராகிய நம்பியாரூரது (கொள்வார் - வினையாலணையும் பெயர்) மலர்போன்ற பாதங்களை என்றும் உரைக்கும் குறிப்புடன் இருப்பதும் காண்க. ஏழு பிறப்பின் முடங்கு கூன் - பிறப்பின் முடங்கும் கூன் என்றது எழுவகைப் பிறப்புக்களிலேயும் எல்லையற்ற முறை அவ்வக் கருப்பக் குழிகளிலே உடலம் வளைவு பட ஒடுங்கி முடங்கிக் கிடத்தல். பிறப்பின் முடங்குகூன் தீர்க்கின்றேன் - என்றது எனது பிறப்பினை ஒழித்துக் கொள்கின்றேன்; தீர்க்கின்றேன் என்று தன்வினையாகப் பொருள் கொள்க; கூன் தீர்க்கின்றேன் என்றதனால் இனம் பற்றிக் குருடும் தீர்க்கின்றேன் என்பது இசையெச்சமாக வருவிக்கப்பட்டது. குருடாவது பிறவி நீக்கும் வழியறியாதபடி அறிவை மறைத்து நிற்கும் ஆணவப்படலம்; “ஆணவ மான படலம்Ó , “கண்இருள்Ó; கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொண்டருளியதனைக் கண்டேனாதலால், அப் பாதங்கள் எனது பிறவிக்கூனையும் குருட்டினையும் தீர்க்கவல்லன என்று காட்சியளவையால் அறிந்து கொண்டமையால் பரவிப் பிறவியறுத் துய்வதானேன் என்றபடி. நம்பிகளது திருவடி வழிபாடு பிறவியறுக்க வல்லது என்பதாம். கூன் உடற் குறையினையும் குருடு உயிர்க்குறையினையும் காட்டின. தேனும்.....சடையார் - இதற்கு மேற்கூறியவாறன்றித், தேனுங் குழலும் பிழைத்த திருமொழியாள் என்பதற்கு உமையம்மையார் என்று பொருள்கொண்டு, அம்மையாரது புலவி தீர்க்க ஐயன் பணிந்தபோது முடியினின்ற மதியும் பிறவும் பணிந்து அதன்மூலம் புலவிதீர்க்கும் தன்மையினையுடைய சடையையுடையவர் என்று பிற்காலத் தான்றோர் அதிசயோத்தி முதலிய அணிச்சுவைகள் பலவும்பட இதனை விரித்துக் கற்பித்துக் கூறிய கருத்துப்பட (பிரபுலிங்க லீலை - அம்மை துதி ) உரைத்தலுமாம். இவ்வாறுரைக்கும்போது பணியும் சடையார் - தீர்க்கும் சடையார் என்று தனித்தனி கூட்டுக. புலவி தீர்ப்பதில் எவ்வாற்றானும் வல்லவர் என்ற குறிப்பும் காண்க. குழைத்த திரு - என்பதும் பாடம். |
|
|