பாடல் எண் :3939

“செய்யுணிகழ் சொற்றெளிவுஞ் செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவேÓ யெனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே யாளானார்
பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்கார்.
1
(இ-ள்) செய்யுணிகழ்.....துணிந்து - செய்யுள்களாக நிகழவரும் சொற்களைத் தெளிதலையும், செம்மைதரும் பயனுடைய நூல்கள் பலவற்றை நோக்குதலையும் மெய்த்தவாறு உணர்கின்ற உணர்ச்சியின் பயனாவது இதுவேயாகும் என்று துணிந்து; விளங்கி......ஆளானார் - விளங்கி ஒளி வீசுகின்ற விடத்தினை அணிகின்ற கண்டத்தினை உடைய இறைவரது மலர்போன்ற திருவடிக்கே ஆளானவர்களே; பொய்யடிமையில்லாத.....மிக்கார் - பொய்யடிமையில்லாத புலவர் என்ற புகழான் மிகுந்தவர்கள்.
(வி-ரை) செய்யுணிகழ் சொல்தெளிவும் என்றதனால் சொல்லும், செவ்விய நூல்பல நோக்கும் - என்றதனால் பொருளும் உணர்த்தப்பட்டன; முன்னதில் எழுத்தும் சொல்லும் யாப்பும், அணியும் ஆகிய நான்கும், பின்னதில் பொருள் என்னும் பொருளிலக்கணம் ஒன்றுமாக தமிழிலக்கணமைந்தும் பெறப்பட்டமையும் காண்க. “உரையின் வரையும் பொருளி னளவும், இருவகைப்பட்ட எல்லைÓ (பட்டினத்தடிகள்).
செய்யுள் - செய்யப்படுவது; “பல சொல்லாற் பொருட் கிடனாக வல்லோரணிபெறச் செய்வன செய்யுள்Ó; இவற்றினியல்பெல்லாம் தொல்காப்பியம் செய்யுளியல், யாப்பருங்கலம் முதலியவற்றுட் காண்க.
செய்யுள் நிகழ் சொல் தெளிவு - நிகழ்தல் - விளங்க நிலைத்தல்; சொல் தெளிதலாவது இடம் காலம் நுதலிய பொருள் முதலியவற்றுக்கேற்ற சொற்களைத் தெளிந்து கொள்ளுதல்; இதனாற் சொல்லிலக்கணமும் எழுத்திலக்கணமும் வரையறைபடத் தேர்தல் அடங்கியவாறு,.
செவ்வியநூல் பலநோக்கும் - செவ்விய - செம்மை தரவல்ல; இதனால் விழுமியபொருளிலக்கண வரம்பும், அதனுள் சிறந்த இறைவன் புகழ்பாடும் நிலையும் கொள்ளப்பட்டன; நோக்குதல் ஊன்றிய கருத்தானுணர்தல்; இதனாற் பொருணூல் வகை கூறப்பட்டது; “பொருளமைத்துÓ என்பது வழிநூல்.
மெய்யுணர்வின் பயன் - தெளிவும் நோக்கும் மெய்யாக உணரும் உணர்வின் பயன்.
பயன் இதுவே - கண்டத்தார் மலரடிக்கே யாளாகுந் தன்மை பெறுதலே பயன்; ஏகாரம் பிரிநிலை; “வாயி ருந்தமி ழேபடித் தாளுறா, வாயி ரஞ்சம ணும்Ó (அரசு, பழையாறை - வடதளி ) என்றபடி தமிழ் படித்தும் ஆட்படாத நிலையன்றித் தமிழ்பாடுதல் இறைவன் புகழ்பாடுதற்கேயாம் என்று துணிதல். “தமிழ்கற்போர்Ó- “ஞானத்தமிழ்Ó;“தமிழ்நாதன்Ó என்பன வாதியாக வருவன இக்கருத்துடையன.
விளங்கி ஒளிர் கண்டத்தார் - என்க. விளக்கமாவது செம்மேனியி னடுவிற் கருமணி பதித்தாற்போல மேல் விளங்கிக் காணப்படுதல்; ஒளிர்தல் - சிவனது எல்லாம் வல்ல தன்மையும் பேரருளுடைமையும் உணர்ந்து உயிர்கள் அடைந்துய்யக் காட்டி நிற்றல்.
மலரடிக்கே - ஏகாரம் பிரிநிலை. மேற்பாட்டிலும் “புரிசடையார் தமையல்லால்Ó என்பது காண்க; “அரன் சேவடிக்கேÓ என்பது வழிநூல்.
ஆளானார் - புகழ்மிக்கார் - எனப் பெயர்ப் பயனிலையாக முடிக்க.
பயனிதுவே - மலரடிக்கே ஆளாம் தன்மையினால் வீடுபேறு பெறுதல்; எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்Ó என்றது ஈண்டு வைத்துணர்தற்பாலது. ஐவகை யிலக்கணமும் கற்றுப், பாடுந்தன்மை வல்ல புலவர் பொய்யடிமையில்லாராய் இறைவருக்கு ஆளாகி அடிமைத் திறம்படப் பாடுதலே பயனாக் கொள்வர் என்பது.
பொய்யடிமை யில்லாத - பொய் - பொய்ப் பொருள்; பொய்யடிமை - பொய்யினுக்கு அடிமை என்று நான்கனுருபு விரிக்க; மேற்பாட்டில் “மெய்யடிமைÓ (3940) என்றவிடத்தும் இவ்வாறே மெய்யினுக்கு அடிமை என்க; பொய்யாவன அசத்தாகிய உலகம் பாசம்.
பொய்யடிமை யில்லாத - என்று எதிர்மறை முகத்தாற் கூறியது உறுதிபயத்தற்கு! இதனை உடம்பாட்டு முகத்தால் “மெய்யடிமை யுடையார்Ó என மேல்வரும் பாட்டில் இவர்தம் பெற்றிமையினை விளக்கி யருளினார்; பொய்க்கு அடிமை யில்லாதாராயின், பின் எப்பெற்றியில் யாருக்கு அடிமையாவார் எனின், அதனை விளக்க எழுந்தது மேல்வரும் பாட்டு.
பயில்நோக்கும் - புலமிக்கார் - என்பனவும் பாடங்கள்.