குலகிரியின் கொடுமுடிமேற் கொடி வேங்கைக் குறியெழுதி நிலவுதரு மதிக்குடைக்கீழ் நெடுநிலங்காத் தினிதளிக்கும் மலர்புகழ்வண் டமிழ்ச்சோழர் வளநாட்டு மாமூதூர் உலகில்வள ரணிக்கெல்லா முள்ளுறையூ ராமுறையூர். | 1 | (இ-ள்) குலகிரியின்....எழுதி - இமயமலையின் உச்சியின்மேல் தமது வேங்கைக் கொடியின் குறியினைப் பொறித்து; நிலவுதரும்........வளநாட்டு - வெள்ளிய ஒளி வீசுகின்ற முழுமதி போன்ற வெண்கொற்றக் குடை நிழலின்கீழே நீண்ட நிலவுலகத்தினைக் காத்து இன்பம் பெருக அரசளிக்கும் விரியும் புகழினையும் வண்மையினையும் உடைய தமிழ் மன்னர்களாகிய சோழர்களால் ஆளப்பட்ட வளநாட்டில்; மாமூதூர்...உறையூர் - உலகில் வளர்ந்தோங்கும் அழகுகளுக்கெல்லாம் உள்ளுறை இதுவேயாம் என்று சொல்லத்தக்க உறையூர் என்பது பெரிய பழைய ஊராகும். (வி-ரை) உறையூர் - சோழர் வளநாட்டு மாமூதூர் - என்க. குலகிரி - இமயம்; பொன்மலை என்பதுமாம்; மேரு - இமயம் - மந்தரம் இவற்றை ஒன்றாகக் கூறுதல் வழக்கில் வந்தது. “புண்டரிகம் பொன்வரைமே லேற்றிப் புவியளிக்கும்Ó (608), “பொன்மலைப் புலிவென்றோங்கÓ (55) என்று இதனை முன்னருங் குறித்தமை காண்க. குலகிரி - வேங்கைக் குறி - நெடுநிலம் - வண்டமிழ் - மூதூர் - பண்புத்தொகைகள். மேல் - ஏழனுருபு நிலவுதரு - 2- ம் வேற்றுமைத் தொகைÓ மதிக்குடை - உவமைத் தொகை; புகழ்ச்சோழரது சரிதந் தொடங்குகின்றாராதலின் புகழ்பற்றிக் கூறினார். குலகிரியின்.....எழுதி - தங்கள் ஆட்சி வடகோட்டு இமயமலைவரையும் சென்றது என்றறிவிக்க, அவ்வளவும் நிலம் அடிப்படுத்தி அதற்கறிகுறியாக வேங்கைக்குறியினை அம்மலையினுச்சியிற் சோழர் பொறித்த சரித வரலாறு குறிக்கப்பட்டது. சோழரது புராணமாதலின் பழஞ்சரிதமும் நாடும் நகரமும் கூறித் தொடங்கும் காவிய அமைப்பு முறைப்படி ஆசிரியர் கூறியபடியாம்; முன் எறிபத்த நாயனார் புராணத்தினுள் அவர்சரிதம் விரவும் அளவில் அதனுட்பட்ட வரலாறாகவே இச்சோழனாரைப் பற்றிக் கூற வேண்டி வந்தமையாலும், இங்கு அவரது சரிதமேயாதலாலும், பழஞ்சரிதம் நாடு நகரம் முதலிய சிறப்புக்கள் முன்கூறாது ஈண்டு விரிக்கின்றார்; ஒருவகையால் ஆண்டுக் கூறிய நகரச் (கருவூர்) சிறப்பு, அதுவும் சோழரது தலைநகரமாதலின், இவ்வரசர்க்கும் பொருந்துமாறும் காண்க. புராணம் பாடுவித்த சிறப்பும், பாடும் அந்நாளில் உலகாளும் சிறப்பும், சோழர்க்குரிமையாதல் பற்றியும் இவ்விடத்துச் சிறப்பாகக் கூறுதலும் பொருந்தும். இதனை மேல் (3949) உரைத்தலும் காண்க; இதுமுதல் 7 பாட்டுக்களால் நகர்வளம் முதலியவை கூறப்படும் அமைதியும் இந்நகரம் சோழர்களது மிகச் சிறந்த தலைநகரங்களுள் ஒன்றாதல் குறித்தது. ஆளுடையபிள்ளையாரது திருமூக்கீச்சரத் (உறையூர்) தேவாரமும் (பண் - செவ்வழி), அதனுள் சோழரது அரசாட்சியின் பெருமை பற்றியே போற்றிப் பாராட்டுதலும் இங்கு நினைவு கூர்தற்பாலன; கொடுமுடி - உயர்ந்த உச்சி; மலைச்சிகரங்களை முடி என்பது வழக்கு; வேங்கைக் கொடிக்குறி - என்க; வேங்கைக் கொடி சோழர்க் குரியது; எழுதுதல் - கல்லிற் பொறித்தல். இனிதளிக்கும் - சோழர் - நிகழ்காலத்தாற் கூறியது ஆசிரியரது காலத்தில் அவர்களது ஆட்சி நிலவியமை குறித்தது. மலர்புகழ் - விரிந்து பரவும் புகழ்; தமிழ்ச்சோழர் - தமிழ் மூவேந்தர்களுள் சிறந்த ஒரு மரபு என்பது. வளநாடு - சோழ வளநாடு. நாட்டின் பெரும் பிரிவை வளநாடென்பது மரபு வழக்கு; காவிரியின் வளம் பெருக நிறைந்து உள்ளது என்றலுமாம். மாமூதூர் - மா - பெரிய; தலைநகரமாதல் குறிப்பு; பெருநகரம்; முதுமை - பழமையாவது பழங்காலந் தொட்டுச் சிறப்புடன் விளங்குதல்; காவிரிப்பூம்பட்டினம் போல; இந்நகரச் சிறப்பும் பழமையும் சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களுள்ளும் பாராட்டப்பட்டன. அணிக்கெல்லாம் உள்ளுறையூர் ஆம் உறையூர் - உள்ளுறை - கருத்து; இருப்பிடம் என்றலுமாம். உலகில் வளர்கின்ற அணிகள் - மங்கலங்கள் - எல்லாம் இந்நகரின் அணிபோல அமைதல் வேண்டுமென்று கருதவருவன என்பது; ஏனை அணிகள் எல்லாம் விளங்குதல் இந்நகரத்தின் அணியினை உள்ளுறையாகக் கொண்டமையாலே என்றலுமாம்; ஒரு நாயகியின் விளக்கமெல்லாம் நாயகனது உள்ளுறையாலே ஆவன என்பது போல. இப்பொருளில் சோழர் ஆட்சியினாலாகிய மங்கலம் குறிக்கப்பட்டதென்க. உறையூர் - என்ற நகரப் பெயர்ப் பொருளைச் சொல்லணியில் வைத்து அணி செய்தவாறும் காண்க; “திருவாமூர் திருவாமூர்Ó (1277) என்பதாதியாக வந்தன காண்க. இஃது ஆசிரியரது அணிசெய் கவிநலங்களுள் ஒன்று,. “ஊரெனப் படுவது உறையூர்Ó என்று பழந்தமிழ் நூல்களுள் விதந்து கூறப்படுகிறது. உலகுவளர் பணிக்கெல்லாம் - என்பதும் பாடம். |
|
|