அளவில்பெரும் புகழ்நகர மதனிலணி மணிவிளக்கும் இளவெயிலின் சுடர்ப்படலை யிரவொழிய வெறிப்பனவாய்க் கிளரொளிசேர் நெடுவானப் பேர்யாற்றுக் கொடிகெழுவும் வளரொளிமா ளிகைநிரைகள் மருங்குடைய மறுகெல்லாம். | 2 | (இ-ள்) அளவில்....அதனில் - அளவில்லாத பெறும்புகழினையுடைய அத்திருநகரத்தில்; அணி.....எறிப்பனவாய் -அழகிய மணிகளால் விளக்கம் பெறும் இளவெயில் போன்ற சுடர்களின் தொகுதி இராப்போதினை இல்லையாம்படி ஒளி வீசுவனவாக; கிளர் ஒளிசேர்...நிரைகள் - கிளர்கின்ற ஒளி சேரும் நீண்ட ஆகாயத்தின் உள்ள பெரிய கங்கையாற்றிலே கொடிகள் போன்று விளங்கும் ஒளிவளரும் மாளிகைவரிசைகள்; மறுகெல்லாம் மருங்குடைய - வீதிகள் எல்லாம் பக்கங்களில் உடையன. (வி-ரை) மணிவிளக்கும் சுடர்ப்படலை - மணிகளினின்றும் இயல்பின் எழுகின்ற ஒளிக்கதிர்களின் தொகுதி. இரவு ஒழிய எறிப்பனவாய் - இராப்போதென்பதே காணமுடியாதபடி ஒளி செய்ய; எறித்தல் - ஒளி வீசுதல்; இரவு -இருட்போது; இளவெயில் - வெப்பமில்லாத ஒளி. வானப்பேர்யாறு - ஆகாயகங்கை; கெழுவுதல் - விளங்குதல். எறிப்பனவாய் - மாளிகை நிரைகள் யாற்றுக் கொடி கெழுவும் - மணிகளின் ஒளித்தொகுதி மாளிகை வரிசைகளின் மேல் வீசுதலால் அவற்றின் நிழல் வானக்கங்கையிற் காணுதல் வரிசைபெற நீண்ட கொடிகள் போன்ற காட்சி தந்தன என்பதாம்; இவ்வாறன்றி எறிப்பன - கெழுவுவன என்பவற்றைத் தொடர்பின்றி வெவ்வேறாகக் கொண்டு, மணிகளின் கதிர்ப்படலை இரவொழிய எறிப்பன; மாளிகை வரிசைகளின் மேற்கட்டிய கொடிகள் வானக் கங்கையினிற் படிவன - தோய்வன - என்றுரைத்தலுமாம். முன்பொருளில் கொடிபோலப் படலை கெழுவும் என்றும், பின்னைப் பொருளில் கொடிகெழுவும் என்றும் கொள்க. “மாளிகை நிரைவிண் சூழும்Ó (553) என முன்னரும் இக்கருத்தைக் குறித்தமை காண்க. |
|
|