நாகதலத் தும்பிலத்து நானிலத்து நலஞ்சிறந்த போகமனைத் தினுக்குறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய் மாகநிறைந் திடமலிந்த வரம்பில்பல பொருள்பிறங்கும் ஆகரமொத் துளவளவி லாவணவீ திகளெல்லாம். | 3 | (இ-ள்) நாகதலத்தும்....வளத்தினவாய் - மேலுலகமாகிய விண்ணுலகினும் கீழ் உலகமாகிய பாதலவுலகினும், நிலவுலகினும் நன்மையாற் சிறந்த போகங்கள் எல்லாவற்றுக்கும் உறுப்பாகிய ஒப்பற்ற வளங்களையுடையனவாகி; மாகம்....ஆகரம் ஒத்துள - ஆகாயமளாவக் குவிந்த எல்லையில்லாத பற்பல வகைப்பட்ட பொருள் யாவும் கூடி விளங்கும் உறைவிடம்போல உள்ளன; அளவில்....எல்லாம் - அளவில்லாத கடை வீதிகள் எல்லாம். (வி-ரை) நாகதலம் - விண்ணுலகம்; “அமரர்புரிÓ (3953) என்பதும் கருதுக. பிலம் - கீழ்உலகம்; பாதலம்; நானிலம் - மண்ணுலகம்; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பகுக்கப்படுதலின் நானிலம் எனப்படும். நலஞ்சிறந்த போகம் - நன்மை பயக்கும் போகங்கள்; நலஞ் சிறவாத பொல்லாத போகங்களும் உள்ளனவாதலின் அவற்றை நீக்குதற்கு நலஞ்சிறந்த என்றார். பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; போகங்கள் - அனுபவங்கள்; உறுப்பு - அவற்றைப் பெறுதற்குத் கருவியாக உள்ளவை; நன்மையல்லாத போகங்களுக்குச் சோழரது தலைநகரமாகிய இப்பதியில் இடமில்லை என்றபடி; தீயபோகங்களே நிரம்பிய நமது பெருநகரங்களுடன் இதனை ஒப்பிடுக. பிலத்தினும் நலஞ்சிறந்த போகமாவன, பதும மாநாகம் உறையும் பிலத்தில் அம்மை தவஞ்செய்ய உறைந்தது போல்வன. பொருவு - ஒப்பு; அளவுமாம். உறுப்பாம் - வளமாவன - உறுப்புக்களைத் தரும் வளங்கள். ஆதனங்கள், சோலைகள், முதலிய பலவும், அணிகலன்கள் பட்டாடைகள் முதலிய பலவும் இவற்றுள் அடங்கும். மாகம் நிறைந்திட - மாகம் - ஆகாயம்; விண்ணுற வடுக்கிய ஈட்டங் குறித்தது. ஆகரம் - உறையுள்; கடல், எடுக்க எடுக்கத் தரும் சுரங்கம் என்றலுமாம். ஆவண வீதிகள் - கடை வீதிகள்; அளவில் என்றது பற்பல வகை குறித்தது. |
|
|