துளைக்கையிரா பதக்களிறுந் துரங்கவர சுந்திருவும் விளைத்தவமு துந்தருவும் விழுமணியுங் கொடுபோத உளைத்தகட லிவற்றொன்று பெறவேண்டி யும்பரூர் வளைத்ததுபோன் றுளதங்கண் மதில்சூழ்ந்த மலர்க்கிடங்கு | 6 | (இ-ள்) துளைக்கை....கொடுபோத - துளையினைக் கொண்ட துதிக்கையினை உடைய ஐராவதம் என்னும் யானையும், உச்சைச் சிரவம் என்னும் அரசப்புரவியும், இலக்குமியும், கடைந்த அமுதமும், கற்பக தருவும், சிந்தாமணியும் ஆகிய இவற்றையெல்லாம் தேவர்கள் எடுத்துக் கொண்டு போனமையால்; உளைத்த கடல் - வருந்திய பாற்கடலானது; இவற்று.....வேண்டி - இவற்றுள் ஒன்றையேனும் மீளப்பெறுதலை விரும்பி; உம்பரூர்....போன்று - தேவர்களது உலகத்தினை வளைத்தது போல; அங்கண்...கிடங்கு - அவ்விடத்து மதிலினைச் சூழ்ந்த மலர்கள் நிறைந்த அகழி; உளது - உளதாம். (வி-ரை) மதில் சூழ்ந்த அந்நகரத்தினைச் சுற்றிலும் அகழி உள்ளது; அவ்வகழி பாற்கடலே வந்து வளைத்தது போன்றிருந்தது; அந்நகரம் பல வளங்களாலும் தேவர் நகரம் போன்றிருந்தது; தேவர் நகரத்தைப் பாற்கடல் வளைத்து இவ்வாறு முற்றுகையிடுதல் போலச் சூழ்ந்தது; அந்நகரில் தேவர்கள் தன்னிடமிருந்து கொண்டுபோன அயிராவதக் களிறு - முதலிய பொருள்களை அங்குச் சேமித்து வைத்திருந்தலால் அவற்றுள் ஒன்றையேனும் மீளப்பெறும் பொருட்டுச் சூழ்ந்துள்ளது என்று தற்குறிப்பேற்ற அணிநலம்பட உரைத்தவாறு; கள்வர் வல்லிதிற் கவர்ந்த பொருள்களைச் சேமித்த இடம் தெரிந்தால் அவற்றைப் பறியுண்டோர் அவ்விடத்தினைச் சூழ்ந்து காவல் இட்டு அவற்றை மீளப்பெற முயலும் உலகியல் நிகழ்ச்சி பற்றி உரைக்கப்பட்டது. அயிராவதம் - என்பது முதல்குறைந்து இராபதம் என நின்றது. துரங்க அரசு - குதிரைகளின் மேம்பட்ட அரசப் புரவியான உச்சைக் சிரவம் என்பது. திரு - இலக்குமி; இங்கு அவள் உருவமாகிய செல்வங்களைக் குறித்தது. விளைத்த அமுது - விளைத்தல் - கடைந்தெடுத்தல். தரு - கற்பகம்; மணி - சிந்தாமணி. கொடுபோத - கைப்பற்றிக் கொண்டு போதலினால்; கொடு - கொண்டு; பறியுண்டமையால் என்பது குறிப்பு; உளைத்தகடல் - உளைத்த - வயிறு வாய்ந்து தான் ஈன்றவற்றை இழந்ததனால் வருந்திய. ஒன்று - ஒன்றையேனும்; பெற - மீட்டுப்பெற. உம்பரூர் வளைத்தது போன்று - உம்பர் ஊர் - பொன்னகரம்; ஊரினை - இரண்டனுருபு விரிக்க. வளைத்தல் - சூழ்தல்; முற்றுகையிடல் என்றுரைக்கவும் நின்றது. அவ்வூர் பொன்னகரம் போன்றுள்ளது என்பதும் அகழி கடல்போன்றுள்ளது என்பதும் உட்குறிப்பு. இரவொழிய வெறிப்பன - போக மனைத்தினுக் குறுப்பரம் வளம் - களிற்று நிரை - துரங்கசாலை - என முன்கூறியவற்றுள் ஒவ்வொன்றும் பாற்கடல் தந்த இவற்றை ஒப்பன என்பது. அவற்றுள் ஒன்றையேனும் மீளப்பெற விரும்பியது பாற்கடல் என்பதன் குறிப்பு. உம்பரூர் - இதுபோலவே கருவூரையும் அமரர்புரி (3953) என்பதும் காண்க. |
|
|