பாடல் எண் :3948

காரேறுங் கோபுரங்கள் கதிரேறு மலர்ச்சோலை
தேரேறு மணிவீதி திசையேறும் வசையிலணி
வாரேறு முலைமடவார் மருங்கேறு மலர்க்கணையொண்
பாரேறும் புகழுறந்தைப் பதியின்வளம் பகர்வரிதால்.
7
(இ-ள்) காரேறும்......வசையிலணி - மேகங்கள் தவழ்ந்தேறுகின்ற கோபுரங்களையும், இரு கதிர்களும் ஏறும் மலர்கள் நிறைந்த சோலைகளையும், தேர்கள் உலவுகின்ற அழகிய வீதிகளையும், எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிச் செல்கின்ற வசையில்லாத அழகுகளையும் உடைமையால்; வாரேறும்....பாரேறும் புகழ - கச்சணிந்த முலையினையுடைய பெண்களிடையேயேறும் மலரம்புகளின் செயல் வாய்ந்த ஒள்ளிய உலக முழுதும் பரவும் புகழ்பூண்ட; உறந்தை....பகர்வரிதால் - உறையூர் என்ற பதியினது வனங்களைச் சொல்லுதல் அரிதாகும் (எறிதன்று).
(வி-ரை) ஏறும் - என்பன பெயரெச்ச முடிபுகளாகக் கொண்டு அங்கங்கும் கூட்டிமுடித்துக் கொள்க. இங்ஙனமன்றி, முதல் நான்கினையும் வினைமுற்றுக்களாகக் கொண்டு, (இந்நகரத்தின்) கோபுரங்களில் கார் ஏறும்; சோலைகளில் கதிர்கள் ஏறும்; வீதிகளில் தேர் ஏறும்; அணிகள் திசை ஏறும் என்று முடித்துரைப்பதுமாம்.
காரேறும் கோபுரங்கள் - கதிர்ஏறும் மலர்ச்சோலை - கோபுரங்களும் சோலைகளும் வானளாவ வுயர்ந்துள்ள சிறப்புக் குறித்தபடி.
தேர் ஏறு மணிவீதி - ஏறுதல் - இயங்குதல் - உலாவுதல். இங்குக் குறித்தது போர் நிலையில் செல்லும் தேர்களி னியக்கமன்று; அரசமரபினர்களும் செல்வர்களும் தேர்ஏறி உலாவும் நிலைபற்றியது; “வளவநின் புதல்வ னாங்கோர் மணிநெடுந் தேர்மீ தேறி....அரசுலாந் தெருவிற் போங்கால்Ó (116).
அணி - அழகின் பெருமை; திசைஏறுதலாவது எல்லாத் திசையின் நாட்டு மக்களாலும் புகழப்படுதல்; வசையில் - இழிபில்லாத; இழிபு - இகழ்ச்சி - யில்லாத அணி (அழகு) என்றது உயர்விலே மனம் செல்லக் காரணமாக விளங்கும் அழகுகள். “உலகில்வள ரணிக்கெல்லா முள்ளுறையூர்Ó (3942) என்ற கருத்தும் காண்க. இந்நாளில் மக்கள் கோலம் என்ற பெயரால் நாட்டிற் செய்து மகிழும் அலங்கோல அணி வகைகளைக் கருத, இவ்வேறுபாடு விளங்கும். வசையில்வளி - என்று பாடங் கொண்டு தென்றலைக் குறித்தாகக் கொள்வாரு முண்டு.
மடவார் மருங்கு மலர்க்கணை ஏறும் புகழ் - என்க. மலர்க்கணை - மன்மதனது மலரம்புகள். அவை மடவார் மருங்கேறும் புகழாவது அவர்கள் இணையற்ற இன்பத்துக்கு இடமாய் விளங்குதல். மருங்கு - என்பதனை இடை என்று கொண்டு, மடவார்களது இடையின் காரணமாக ஆடவர்கள்பால் ஏறும் மலர்க்கணை என்றுரைப்பது மொருபொருள் என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை; “நலஞ்சிறந்த, போகமனைத் தினுக்குறுப்பாம் பொருவிறந்த வளம்Ó (3944) என்று முன்னர்க் கூறியது உயிரில் பண்டங்களாய்ப் போக உறுப்புக்களாய் விளங்கும் அணிகலன்களும் உணவுப் பொருள்களும், கண் - செவி - ஊறு முதலிய புலன்களினுகர்ச்சிக்குரியவையுமாம்; இங்குக் கூறியது அவ்வைம்புலனுகர்ச்சிக்கு ஒரே நிலைக்களமாய் உயிருள் பொருள்களாய், விளங்கும் மகளிரை; பார்ஏறும் புகழ் - என்றது இந்நகர் வாழும் மக்கள் மடவாருடன் கூடி நிகழும் இல்வாழ்க்கை யின்ப நிலைகள் உலகிற் புகழ்ந்துரைக்கும் தன்மையுடையன என்றதாம்.
கதிர் - இருசுடர்களாகிய சூரிய சந்திரர்கள்.
கதிர்ஏறும் - கதிர்கள் ஏறிச்செல்லுதற்கிடமாகிய; “வெண்மதியஞ், சோலைதொறு நுழைந்துபுறப் படும்பொழுதுÓ (1906).
உறந்தைப்பதி - உறையூர்; மரூஉ. பகர்வரிதால் - இதுவரை ஏழுபாட்டுக்களாலும் கூறிவந்த நகரச் சிறப்பினை முடித்துக் காட்டியவாறு.