பாடல் எண் :3950

ஒருகுடைக்கீழ் மண்மகளை யுரிமையினில் மணம்புணர்ந்து
பருவரைத்தோள் வென்றியினாற் பார்மன்னர் பணிகேட்பத்
திருமலர்த்தும் பேருலகுஞ் செங்கோலின் முறைநிற்ப
அருமறைச்சை வந்தழைப்ப வரசளிக்கு
மந்நாளில்,
9
(இ-ள்) ஒரு குடைக்கீழ்.....மணம்புணர்ந்து - தமது ஒரு குடையின் கீழே குளிர் தூங்கும்படி பூமிதேவியைத் தமக்கே உரிமையாக மணந்து பருவரை.....பணிகேட்ப - பருத்த மலைபோன்ற தமது தோளின் வெற்றியினாலே உலகத்தின் பகை அரசர்கள் தமது ஏவலின் வழிநின்று நடக்கவும்; திருமலர்த்தும்....முறை நிற்ப - செல்வத்தாற் செழிப்புப் பொருந்தும் பெரிய உலக முழுதும் தமது செங்கோலின் ஆணைமுறை வழியே நிற்கவும்; அருமறைச் சைவந் தழைப்ப - அரிய வைதிக சைவம் தழைத்தோங்கவும்; அரசளிக்கும் அந்நாளில் - அரசு புரிகின்ற அந்நாளிலே;
(வி-ரை) ஒரு குடைக்கீழ்....மணம் புணர்ந்து - தமது ஒரு குடையின்கீழ் உரிமைப்படி நிலம் முழுதும் ஆட்சியுள் வரும்படி முடிசூடி; ஏகசக்கிராதி பத்தியம் என்பது வடமொழி வழக்கு. மண் மகளைமணம் புணர்தல் என்பது நிலத்தின் அரசாட்சியினை மேற்கொள்ளுதல் என்று குறிக்கக் கூறும் உபசார வழக்கு. ஒரு குடை - மண்மகள் - பேருலகு - செங்கோல் - அருமறை - பருவரை - பண்புத்தொகைகள்.
பருவரைத் தோள்....கேட்ப -இது பகைப் புலத்தவர்களாய் அடங்காத மன்னர்களை வென்று அடிப்படுத்திப் பணிகேட்கச் செய்து அளிக்கும் ஆட்சியினைக் குறித்தது.
திருமலர்த்து.....முறை நிற்ப - இது தம் வழி நிற்கும் உலகினை ஆளும் ஆட்சியினைக் குறித்தது.
திருமலர்த்தும் பேருலகு - திருவினால் விளக்கமுறும் பெரிய உலகம்; சோழர் நாடு. விண்ணுலக ஆட்சி என்றலுமாம்; இப்பொருளில் முன் “பார்மன்னர்Ó என்றது நிலவுலக ஆட்சியினைக் குறித்ததென்க.
அருமறைச் சைவம் - வேதநெறித் தொடர்புடைய சைவநெறி; வைதிகசைவம்; தழைப்ப - இதனை மேல்வரும் பாட்டில் விரிப்பார். “வேதப் பயனாம் சைவம்Ó (1214).
அந்நாளில் - பாலிப்பார் - வந்தணைந்தார் - என்று முடிக்க.