பிறைவளருஞ் செஞ்சடையார் பேணுசிவா லயமெல்லாம் நிறைபெரும்பூ சனைவிளங்க, நீடுதிருத் தொண்டர்தமைக் குறையிரந்து வேண்டுவன குறிப்பின்வழி கொடுத்தருளி முறைபுரிந்து திருநீற்று முதனெறியே பாலிப்பார், | 10 | (இ-ள்) பிறைவளரும்...விளங்க - பிறைவளர்தற் கிடமாகிய சிவந்த சடையினையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் சிவாலயங்களெல்லாவற்றிலும் நிறைந்த பெரும் பூசனைகள் விளங்கச் செய்து; நீடு....கொடுத்தருளி - நீடும் திருத்தொண்டர்களைக் குறையிரந்து அடுத்து உபசரித்து அவர்களுக்கு வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து கொடுத்தருளி; முறைபுரிந்து - அரசாட்சி செய்து; திருநீற்று ....பாலிப்பார் - முதன்மை பெற்ற திருநீற்று நெறியினையே பாதுகாப்பாராகி. (வி-ரை) முன்பாட்டினால் அரசாட்சியின் உலகியல் முறை கூறினார். இப்பாட்டினால் அரசாட்சியின் உயர்ந்த குறிக்கோளாகிய உயிரியல் முறை கூறுகின்றார். முறை - சிவாலயங்களில் எல்லாம் நிறைபெரும் பூசனை விளங்கச் செய்தலும், திருத்தொண்டர்களுக்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தலும் ஆகிய முறை; ஆண்டவன் வழிபாடும் அடியார் வழிபாடுமே நீற்று நெறியினைப் (சிவநெறியினைப்) பாலிக்கும் முறை என்பதாம். நீற்றுநெறி - நீற்றினையே முதன்மையாகக் கொண்டுள்ள சைவம்; நெறி - சமயம். முதல் - முதன்மையான; பாலித்தல் - பரிபாலித்தல்; காத்தல், “மண்ணினிற் பிறந்தார் - பெறும் பயன்Ó (2985) “வேத வுள்ளுறை யாவனÓ (1832) என்ற திருப்பாட்டுக்களின் கருத்து ஈண்டு நினைவு கூர்தற்பாலன. நிறைபெரும் பூசனை விளங்குதல் - நித்திய நைமித்திகங்கள் சிறக்க நிபந்தம் வைத்து நடத்துதல். விளங்க - முறை புரிந்து என்றும் கூட்டுக. |
|
|