பாடல் எண் :3952

அங்கணினி துறையுநா ளரசிறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகொணரத்
தங்கள்குல மரபின்முதற் றனிநகராங் கருவூரில்
மங்கலநா ளரசுரிமைச் சுற்றமுடன்
வந்தணைந்தார்.
11
(இ-ள்) அங்கண் இனிது உறையும் நாள் - அங்கு இனிதாக இருக்கின்ற நாளிலே; அரசு.....வீற்றிருந்து - அரசர்கள் அடிவணங்க அரசு வீற்றிருந்து; கொங்கரொடு.....கொணர - கொங்கர்களும் மேற்றிசையின் முதல்வர்களாகிய சிற்றரசர்களும் கப்பம் கொண்டுவந்து செலுத்தும் பொருட்டு; தங்கள்.....வந்தணைந்தார் - தமது குலமரபுக் குரிமையுடைய ஒப்பற்ற பெருநகரமாகிய கருவூரிலே மங்கல நாளிலே அரசுரிமைச் சுற்றமாகிய மந்திரிகள் முதலாயினோருடன் வந்து சேர்ந்தனர்.
(வி-ரை) அரசிறைஞ்ச வீற்றிருத்தலாவது மன்னர் வந்து பணியும் படி சிங்காதனத்தில் வீற்றிருந்து முறை புரிதல்.
கொங்கரொடு....கொணர - கொங்கர் - கொங்கு நாட்டினை அரசு புரியும் சிற்றரச மரபினர்; குடபுலத்துக் கோமன்னர் - மேற்குத் திக்கில் அரசு புரியும் குறுநில மன்னர்கள். திறை - சிற்றரசர்கள் பேரரசர்க்குச் செலுத்தும் கப்பம்; திறைகொணர - திறை கொணரும்பொருட்டு; இது பேரரசர்களின் அரசமரபு வழக்கு; தம்கீழ் உள்ள பல தேயத்தின் அரசரும் திறைகொணர - அங்கங்கும் தம் தலைநகரங்கள் வகுத்து அங்குச் சென்று வீற்றிருந்து முறைபுரிதல்; இவ்வழக்கு அவ்வக் குறுமன்னர்கள் திறை செலுத்துதற்கும் பேரரசர் கொள்ளுதற்கும் இலகுவாதற் பயனுடைத்து; அன்றியும் அவ்வவ் வரசர் மேலிட்டு அடராதபடி அடக்கியாளுதற்கும் சாதனமாகும்.
தங்கள் குலமரபின் முதற் றனி நகராம் கருவூர்- சோழர்கள் முடிசூடும் ஐந்து நகரங்களுள் ஒன்று. (1213)
மங்கல நாள் - பேரரசர் அரசகாரியத்தின் பொருட்டு வந்தணைகின்றாராதலின் மங்கல நன்னாட் குறித்து வந்தருளினர் என்க. இது நித்திய மங்கலமாகிய சிவப்பேறு பெறுதற்கும் உரித்தாய் நிகழ்ந்தமை பின் சரித விளைவினா லறியப்படும். “சேவடியின் அக்கருணைத் திருநிழற்கீ ழாராமை யமர்ந்திருந்தார் (3981).
அரசுரிமைச் சுற்றம் - மந்திரிகள் சேனைத் தலைவர் முதலாயினோர்; உடற் சுற்றத்தினைப் பிரித்தலின் அரசுரிமை என்பது பிறிதினியைபு நீக்கிய விசேடணம். அமைச்சர் (3955 - 3959 - 3979); ஐம்பெருங் குழு - எண்பேராயம் என்ற இத்திறத்தினர்.