மாளிகைமுன் னத்தாணி மண்டபத்தின் மணிபுனைபொற் கோளரியா சனத்திருந்து குடபுலமன் னவர்கொணர்ந்த ஓளிநெடுங் களிற்றினணி யுலப்பில்பரி துலைக்கனகம் நீளிடைவில் லிலகுமணி முதனிறையுந் திறைகண்டார். | 13 | (இ-ள்) மாளிகைமுன்....இருந்து - அரசமாளிகையின் முன்னே அரசிருக்கை மண்டபத்திலே மணிகளாற் புனையப்பட்ட பொன்னானியன்ற சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து; குடபுல மன்னவர் கொணர்ந்த - மேற்குத்திசை நாடுகளின் அரசர்கள் கொண்டுவந்து செலுத்திய; ஓளிநெடும்.....திறைகண்டார் - வரிசை பெற நிறுத்தப்பட்ட பெரிய யானைக் கூட்டமும், அளவில்லாத குதிரைகளின் அணிவரிசையும், எடை நிறைவுடைய பொன் குவியலும், நெடுந்தூரத்தில் ஒளி வீசும் மணிகளும் என்றிவை முதலாகிய பொருள்கள் நிறைந்த திறையினைக் கண்காணித்தருளினர். (வி-ரை) அத்தாணி மண்டபம் -அரசர் அரசகொலுவிருக்கும் மண்டபம்; Court Hall என்பர் நவீனர். முன் - இஃது அரசமாளிகையின் முன்புறம் அமைவது மரபு. கோளரி ஆசனம் - சிங்காசனம். ஓளி - வரிசை - ஒழுங்கு; யானைப் பந்தி என்றலுமாம். துலை - எடைச் செறிவு. நீளிடை வில் இலகுதலாவது - நெடுந்தூரத்தில் ஒளி வீசுதல்; வில் - ஒளி. திறை - சிற்றரசர் பேரரசர்க்குச் செலுத்தும் கப்பம்; கண்டார் - காணுதல் - கண்காணித்தல். களிற்றணியும் விளக்குமணி - துணைக்கனகம் - என்பனவும் பாடங்கள். |
|
|