பாடல் எண் :3957

விளங்குதிரு மதிக்குடைக்கீழ் வீற்றிருந்து பாரளிக்கும்
துளங்கொளிநீண் முடியார்க்குத் தொன்முறைமை நெறியமைச்சர்
“அளந்ததிறை முறைகொணரா வரசனுள னொருவÓ னென,
வுளங்கொள்ளும் வகையுரைப்ப வுறுவியப்பான் முறுவலிப்பார்,
16
(இ-ள்) விளங்குதிரு...முடியார்க்கு - விளங்குகின்ற திருவுடைய வெண்கொற்றக் குடைக்கீழே வீற்றிருந்து உலகத்தை அரசளிக்கும் ஒளிமிக்க நீண்ட முடியினையுடைய அவ்வரசருக்கு; தொன்முறைமை....உரைப்ப - பழைய முறைப்படி நீதி நெறி விளக்கும் அமைச்சர்கள், தேவரீரது கட்டளையின்படி அளவுபடுத்திய திறைப்பொருளை முறைப்படி கொண்டு வந்து செலுத்தாத அரசன் ஒருவன் உளன் என்று அவர் தெரியும்படி உரைக்க; உறுவியப்பால் முறுவலிப்பார் -மிக்க வியப்புடனே புன்முறுவல் செய்வாராகி,
(வி-ரை) மதிக்குடை - உவமைத் தொகை; மதி - நிறைமதி; மது - அமிர்தம்; அதனையுடையது மதி. துளங்குஒளி - மிக்கஒளி. துலங்குதல் - விளங்குதல். முடியார்க்கு - தெரிந்துரைப்பீர் என்று மொழிந்தருளிய (3955) அவ்வரசர்க்கு விடையாக.
தொன் முறைமை நெறி - பழமையாக வழிவந்த முறையின் நீதி செலுத்தும் வழியினை அறிவிக்கும்.
அளந்த - அரசர் கட்டளைப்படி அளவு படுத்திக் கட்டளையிட்ட; முறை - முறைப்படி.
ஒருவன் - ஒருவனே; பிறரில்லை என்க. ஏகாரம் தொக்கது.
முறுவலிப்பார் - சினமும் இகழ்ச்சியும் பற்றிய புன்முறுவல் பூத்து. முற்றெச்சம். முறுவல் - புன்னகை.