பாடல் எண் :3959

அடல்வளவ ராணையினா லமைச்சர்களும் புறம்போந்து
கடலனைய நெடும்படையைக் கைவகுத்து மேற்செல்வார்
படர்வனமு நெடுங்கிரியும் பயிலரணும் பொடியாக
மிடலுடைநாற் கருவியுற வெஞ்சமத்தை மிகவிளைத்தார்.
18
(இ-ள்) அடல்.....மேற்செல்வார் - வல்லமையுடைய சோழரது ஆணைப்படி அமைச்சர்களும் புறத்தே போந்து கடல்போன்ற பெரும்படைகளை அணிவகுத்து மேலே போருக்குச் செல்வார்களாய்; படர்வனமும்....மிக விளைத்தார் - படர்ந்து மிடைந்த வனங்களும் உயர்ந்த மலைகளும் பயிலும் அரணங்களும் பொடியாகும்படி வலிய நாற்பெரும் படைகளும் பொருந்த வெவ்விய போரினை மிகவும் விளைவித்தார்கள்.
(வி-ரை) ஆணை - படைஎழுந்து அரணம் துகளாகப் பற்றறுப்பீர் (3958) என்ற கட்டளை.
புறம் - நகர்ப்புறம்; சேனைகளுக்கு இடம் வகுத்த கூடம் முதலியன உள்ள புறநகர்.
கைவகுத்து - அணிவகுத்து; மேற்செல்லுதல் - போர் முகத்துப் புகுதல். பகைமேற் சேறல்.
இது வஞ்சித் திணை: மேற்செல்வார் - முற்றெச்சம்; படர்வனம் - படர்தல் - செறிந்து விரிந்து பரவுதல்.
1 :- புறநானூறு 87 - 95, 97 - 101, 103 -104, 158 - 206, 208 - 231, 232 - 235, 310 - 315, 390. இவனைப் பாடினோர் ஒளவையார், பரணர் முதலியோர்.
2. குறிப்பு;- இவைபற்றி எனது சேக்கிழார் என்ற நூலில் அதிகன் என்ற தலைப்பின் கீழ் 111 - 113 பக்கங்களிற் கூறியவற்றையும், அவற்றுட் கூறிய பழந்தமிழ் நூல்கள் முதலிய வரலாறுகளையும் பார்க்க.
பயில்அரண் - பழகிய அரணிடங்கள்.
நாற்கருவி - தேர் - கரி - பரி - ஆள் என்ற நால்வகைச்சேனை; சமம் - போர். கருவி - ஆயுதம்; படைத்தொகுதி குறித்தது; நாற்கருவியும் - முற்றும்மை தொக்கது.
வெஞ்சமரம் - என்பதும் பாடம்.