பாடல் எண் :3961

கயமொடு கயமெதிர் குத்தின; அயமுட னயமுனை முட்டின;
வயவரும் வயவரு முற்றனர்; வியனமர் வியலிட மிக்கதே.
20
(இ-ள்) கயமொடு....குத்தின - யானைகளுடன் எதிர் யானைகள் குத்தின; அயமுடன்....முட்டின - குதிரைகளுடன் முனைந்து குதிரைகள் மோதிப் பொருதன; வயவரும்.....உற்றனர் - வீரர்களுடன் வீரர்கள் எதிர்த்துப் பொருந்தினர்; வியனமர்....மிக்கதே - இங்ஙனம் பெரிய போர் விரிந்த நிலத்தினிடை மிகுந்தது.
(வி-ரை) கயம் - யானை; அயம் - குதிரை; வயவர் - வீரர்கள்; காலாட்படை; யானைகளும் குதிரைகளும் ஒன்றை யொன்று தாக்க அவற்றை மேலிருந்து செலுத்திய வீரர்களும் எதிரெதிர்ந்து உற்றனர் என்றலுமாம்; அமர் - போர்!; மிக்கது - தொடங்கி மூண்டது. போர் தொடக்கமாதலின் முடுகிய சந்தத்தால் கூறுகின்றார்.
முன்பாட்டு முதற் பதினொரு பாட்டுக்களால் இருபுறமும் நிகழ்ந்த போர்த்திறம் பற்றிப் புறத்திணைத் துறைகளின் இயல்புபடப் பொருளின் தமிழ்நயம் பொருந்த ஆசிரியர் இங்கு விரித்துக் கூறுகின்றார். முன்னர் இயற்பகை நாயனார் புராணத்தும் புறத்துறை பற்றிய இயல்புகள் கூறப்பட்டன. ஆயின், இயற்பகையார் புராணத்தில் கிளைஞரும் நாயனாரும் தடுத்தும் விடுத்தும் தம்முள் இகலிமுட்டிய தனியாட்களின் நிலையேயன்றிப் பிறிதில்லை!; ஏனாதியார் புராணத்துள் வாட்படை பயிலும் வயவீரர்களும் அவர்க்குப் படை பயிற்றும் ஆசிரியரும் தாயம் பற்றித் தம்முட் பொருது பொருள்கொண்ட நிலையேயாம். அரசர்களது போர்நிலை இங்கு நிகழ்வதால் புறப்பொருள் முற்றும் காண உள்ள இடம் இதுவாதல் பற்றிப் புறப்பொரு ளியல்பினை ஈண்டே விரிக்கின்றார்; அகப்பொரு ளியல்புகளைத் தடுத்தாட்கொண்ட புராணத்துள் விரித்த நிலையும் கருதுக. அகம் - புறம் என்ற பொருளியல்புகளைத் தழுவி விளங்கக் காட்டுதல் பெருங்காப்பிய அமைப்புக்களுள் ஒன்றாதலின் அதனையும் உட்கொண்டு ஆசிரியர் இங்குப் புறப்பொருளை விரித்துரைத்தனர் என்க. - சிறப்புப்பற்றி யானையை முற்கூறினார்.
இப்பாட்டால் யானை, குதிரை, காலாள் என்ற மூன்றும் போரில் மூண்டநிலை கூறினார். மலையரண மாதலின் தேர்ப்படைப்போரின் இயைபில்லை.