பாடல் எண் :3962

மலையொடு மலைகள் மலைந்தென, வலைமத வருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத்தெறுங், கொலைமத கரிகொலை யுற்றவே.
21
(இ-ள்) மலையொடு....மலைந்தென - மலையோடு மலைகள் பொருதனபோல; அலைமத...கொழிப்பொடு - அலைபோலப் பாயும் மதமாகிய அருவியின் ஆர்ப்புடனே; சிலையினர்.....தெறும் - மேலேறிய வில்வீரர்களின் செலுத்துகின்ற வேகத்தினும் அழிவு செய்யும் தன்மையுடைய; கொலை.....கொலையுற்றவே - கொலை செய்கின்ற யானைகள் தாமும் கொலையுண்டன.
(வி-ரை) மலையொடு....மலைந்தென - யானைகள் ஒன்றோடொன்று முட்டிப்பொருதல் மலைகள் பொருவன போன்றன என்பதாம்; மெய்யும் வினையும்பற்றி வந்த உவமம். இவ்வடி முற்றுமோனை. “மலைகளுடன் போதுவ போன்றÓ (3795).
அருவி கொழிப்பொடு....தெறும் - என்று கூட்டுக. மலைகளை உவமை கூறியதனால் அருவியும் ஈரிடத்தும் ஒக்குமென்றவாறு.
சிலையினர் - மேலேறிக் கடவும் வில்வீரர்கள்; விசையின் - இன் - ஒப்புப் பொருளில் வந்த ஐந்தனுருபு.
விசையின் - கடவி ஏவும் விசையினாலே என ஏதுப் பொருள் கொள்ளலுமாம்.
கொலை மதகரி கொலையுற்ற - ஒரு யானையைக் கொலைசெய்த யானை தானும் பிறிதொன்றதனாற் கொலையுண்டது; இவ்வாறு பல - என்பார் உற்ற என - அகரவீற்றுப் பலவறி சொல்லாற் கூறினார். கொன்றான் கொல்லப்படுவான் என்று வினைப்பயன் பற்றிய ஞானநூற் கருத்துப்பட நின்ற குறிப்பும் காண்க.
இப்பாட்டால் யானைப் போரின் மூண்டநிலை கூறப்பட்டது.